சுடச்சுட

  

  உரிமைகள் கெஞ்சிக் கேட்டு அல்ல, குரல் எழுப்பிப் பெற வேண்டியவை: இயக்குநர் சேரனுக்கு விஷால் எச்சரிக்கை!

  By எழில்  |   Published on : 05th December 2017 02:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vishal_new1xx

   

  இயக்குநர் சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகள்படி அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  செல்லமே படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமான விஷால், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக அவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை சனிக்கிழமை அவர் வெளியிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  இந்நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்குநரும் நடிகருமான சேரன், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் 2-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

  இதையடுத்து விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

  இயக்குநர் சேரன் அவர்கள் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தைத் தான் ஏற்படுத்துகின்றன. ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்தச் சட்டவிதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவதாலேயே அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தைப் பழிவாங்கும் என்பது ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத்தான் பார்க்கிறேன். சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் சங்க நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது.
   
  எப்போதுமே உரிமைகள் என்பவை கெஞ்சிக் கேட்டு பெற வேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பிப் பெற வேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படிதான் செயல்படுகிறேன். ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதும் அப்படி மக்களின் சார்பில் அவர்களுக்காக குரல் எழுப்பத்தான்.

  என்னுடைய நண்பர்களையும் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதை விடுத்து கீழ்த்தரமான விமரிசனங்களை வைத்து மிரட்டி காரியம் சாதிக்கவோ விளம்பரம் தேடவோ முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கத்தில் அனுமதிக்கவே முடியாது. இனிமேலாவது சேரன் திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்யமான மனோபாவத்துக்கு மாறவேண்டும். சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகள்படி அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று
  கூறியுள்ளார்.

  TAGS
  Vishal
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai