‘அருவி’ படத்துக்கும் அரபு மொழி படமான அஸ்மாவுக்கும் என்ன சம்பந்தம்?

‘அருவி’படம் வெளியான நாளிலிருந்து தொடர்ந்து பாராட்டுகளையும் அதே சமயத்தில் சர்ச்சைகளையும் எதிர்கொள்கிறது.
‘அருவி’ படத்துக்கும் அரபு மொழி படமான அஸ்மாவுக்கும் என்ன சம்பந்தம்?

‘அருவி’ படம் வெளியான நாளிலிருந்து தொடர்ந்து பாராட்டுதல்களையும் அதே சமயம் சர்ச்சைகளையும் எதிர்கொள்கிறது. சில திரை விமரிசகர்கள் சமூக வலைத்தளங்களில் இப்படம் அரபு மொழியில் வெளிவந்த ‘அஸ்மா’ என்ற படத்தின் தழுவல் என்று குற்றம் சாட்டி எழுதி வருகின்றனர்.

மேலும் ‘அஸ்மா’ படத்தின் கதையும் ‘அருவி’ படத்தின் கதைக் களமும் ஒன்றுதான். ‘அருவி’ படத்தில் இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு சில மாற்றங்களைச் செய்து வெளியிட்டுள்ளனர். இத்தகைய ப்ளாகாரிஸம் (plagiarism) கண்டனத்துக்குரியது என்றனர். விமரிசகர்களின் இந்தக் கேள்விக்கு இயக்குனர் பதில் சொல்கிறாரோ இல்லையோ சமீபத்தில் ஃபேஸ்புக்கில், 'ஒரு கிடாயின் கருணை மனு ' திரைப்படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டர்  ராம் முரளி தனது ஃபேஸ்புக்கில் இது குறித்த ஒரு பதிவை எழுதியுள்ளார்.

'இரண்டு வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்தபோது நண்பர் கிருஷ்ண குமார் சொல்லி, எகிப்திய படமான அஸ்மாவை பார்த்தேன். எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படுவோர் மீதான அக்கறையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் அது. சமூகம் ஏற்றுக்கொள்ள தயங்கும் நோய் ஒன்றினை குறித்த புரிதலை உண்டாக்கும் நோக்கில் அத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. படம் முழுவதிலும் ஏராளமான எய்ட்ஸ் நோயாளிகளை ஆஸ்மா எதிர்கொள்ள நேரிடும். அவர்களுக்கிடையில் நிலவும் உணர்ச்சி பரிமாற்றங்கள், எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள், வாழ்தலுக்கான போராட்டம் என முழுக்க முழுக்க எய்ட்ஸ் நோயாளிகளின் மீதான பொது பார்வையை மாற்றியமைக்க வேண்டும் என்பதே அத்திரைப்படத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. அத்தகைய திரைப்படம் ஒன்றினை எடுக்க எகிப்தில் அப்போது தேவை இருந்தது என்பதை படித்து தெரிந்துக்கொண்டேன். 

அருவி திரைப்படத்திற்கும் ஆஸ்மாவுக்கும் இடையில் உள்ள ஒப்புமைகள் என்றால், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படும் பெண்ணும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியும்தான். ஆஸ்மாவில் எய்ட்ஸ் என்பதுதான் அத்திரைப்படத்தின் மையமாக இருந்தது. அருவியில் அது மட்டுமே அல்ல. பிறப்பில் துவங்கி இயல்பாக பயணித்துக்கொண்டிருக்கும் அருவியின் வாழ்க்கையில் எய்ட்ஸ் என்பது ஒரு குறுக்கீடாகவே வருகிறது. அவள் ஏராளமான பொது விஷயங்களை பேசுகிறாள். எய்ட்ஸ் என்பது அவள் சமூகத்திலிருந்து ஒதுங்க வேண்டிய அவசியத்தின் காரணமாகவே அருவியில் கையாளப்பட்டிருக்கிறது.

படத்தின் இறுதி வரையிலும் நாம் பார்த்துக்கொண்டிருப்பது அருவியைதானே தவிர, ஒரு எய்ட்ஸ் நோயாளியை அல்ல. அருவி மிகவும் வரவேற்கப்பட வேண்டிய திரைப்படம் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. ஆனால், அதில் சில குழப்பங்களும், தெளிவின்மையும் இருப்பதாக எனக்குப்பட்டது. ஆனால், ஆஸ்மாவோடு கருத்தில் ரீதியாகவோ, காட்சியமைப்பின் ரீதியாகவோ எவ்வகையிலும் தொடர்பே இல்லாத அருவியை எப்படி அதன் நகலென்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை. இப்படித்தான் அறம் திரைப்படத்தையும் மலையாள திரைப்படம் ஒன்றின் நகலென்று எழுதப்பட்டிருந்த சில பதிவுகளை பார்க்க முடிந்தது. இரண்டு திரைப்படங்களும் உள்ள ஒற்றுமையாக ஆழ்துளை கிணற்றை இவர்கள் சான்றாக காண்பித்தார்கள். 

தமிழ் படத்தின் நாயகனொருவன் மொட்டை அடித்திருந்தால், உலகத்தில் எந்தெந்த திரைப்படங்களில் எல்லாம் அதன் நாயகன் மொட்டை அடித்திருக்கிறான் என்று ஆராய்வதை சிலர் தங்களது கடமையென கருதி செயல்பட்டு வருகிறார்கள். தலைமுடியை மழித்துவிட்டால் எல்லா ஊர் மொட்டையும் ஒன்றைப்போலத்தான் இருக்கும் என்பதை இவர்களுக்கு எப்படி விளக்குவது? கும்கி படத்தின் 'ஒரிஜினல்’ செவன் சாமூராய்தான் என்று சத்தியம் செய்து சொன்ன நண்பர் ஒருவரின் முகம் நினைவு வருகிறது. இப்படி மூலம்/நகல் என்ற சில்லறைத்தனமான ஆராய்ச்சிகளில் இறங்காமல் ஒரு திரைப்படத்தை கருத்தியல்ரீதியாக அணுகுவதே ஆரோக்கியமான போக்கை உருவாக்கும். அஸ்மாவை அருவியோடு ஒப்பிட்டு எழுதப்பட்டிருந்த பதிவுகளை மிகவும் அருவருப்பான பதிவுகளாகவே கருதுகிறேன்.' 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com