கே. பாக்யராஜின் ராஜிநாமாவை ஏற்க திரைப்பட எழுத்தாளர் சங்கம் மறுப்பு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜாவின் ராஜிநாமா அறிவிப்பை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஏற்க மறுத்துள்ளது...
கே. பாக்யராஜின் ராஜிநாமாவை ஏற்க திரைப்பட எழுத்தாளர் சங்கம் மறுப்பு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜாவின் ராஜிநாமா அறிவிப்பை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஏற்க மறுத்துள்ளது.

சர்கார் படக்கதை சர்ச்சை தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும், உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்தப் பிரச்னை சுமூகமாக முடிய முக்கியக் காரணமாக இருந்த கே. பாக்யராஜ், திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.  இந்தப் பொறுப்பை ஏற்று 6 மாதங்களே ஆன நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

திடீர் என்று சர்கார் படம் சம்பந்தமாகச் சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. அந்தப் புகாரைப் பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினரிடம் உண்மை இருப்பதாகத் தெரிந்ததால், அவருக்கு நியாயம் வழங்க பொறுப்பில் உள்ள முக்கியமானவர்கள் அனைவரையும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து, நல்லபடியாக, நியாயமாக அதைச் செயல்படுத்தவும் முடிந்தது. ஆனால் அதில் பல அசெளகரியங்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. அதற்கு முக்கியக் காரணமாக  நான் நினைப்பது, தேர்தலில் நின்று ஜெயிக்காமல் நேரடியாகத் தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான் என்று நினைக்கிறேன். முறையாகத் தேர்தலில் நின்று அதிபெரும்பான்மையுடன் ஜெயித்து பொறுப்பை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கடமையுடன் செயல்படப்போகிறேன். எனக்கு நேர்ந்த அசெளகரியங்கள் என்ன, ஒழுங்கினங்கள் என்ன என்பதைச் சங்க நலன், நற்பெயர் கருதி வெளியிட விரும்பவில்லை. மேலும் நான் முருகதாஸிடம் கெஞ்சியும் உடன்படாததால், சர்கார் படக்கதையைச் சொல்ல நேர்ந்தது. இருந்தாலும் தவறு என உணர்ந்து சன் பிக்சர்ஸிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார். 

இந்நிலையில் பாக்யராஜாவின் ராஜிநாமா அறிவிப்பைத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஏற்க மறுத்துள்ளது. திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மனோஜ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜிநாமா முடிவை நீங்கள் தொலைப்பேசியில் தெரிவித்தபோது அனைவரும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் உங்களது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்வதில்லை என்றும் நீங்களே தலைவராகத் தொடரவேண்டும் என்று அனைவரும் தொலைப்பேசி மூலம் தெரிவித்த கருத்தையே செயற்குழுவின் தீர்மானமாக எடுக்கப்பட்டுவிட்டது. எனவே எப்போதும் போல, தாங்களே தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராகத் தொடர்கிறீர்கள் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com