அஜித் ஆலோசகராகச் செயல்படும் குழுவுக்குத் தமிழக அரசின் அப்துல் கலாம் விருது: ரசிகர்கள் மகிழ்ச்சி!

தமிழக அரசின் அப்துல் கலாம் விருது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவுக்கு வழங்கப்பட்டது...
அஜித் ஆலோசகராகச் செயல்படும் குழுவுக்குத் தமிழக அரசின் அப்துல் கலாம் விருது: ரசிகர்கள் மகிழ்ச்சி!

சுதந்திர தினத்தன்று பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு விருதுகளை தமிழக அரசு அளித்து கௌரவிக்கிறது. மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவைப் போற்றும் விதமாக  ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது’ என்ற ஒரு விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருது, விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும். இந்த விருதாளருக்கு 8 கிராம்  தங்கத்தால் ஆன  பதக்கம் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.  இந்த விருது 2015 முதல் வழங்கப்படுகிறது. 

தமிழக அரசின் அப்துல் கலாம் விருது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவுக்கு வழங்கப்பட்டது. இந்தக் குழு நடிகர் அஜித்தின் ஆலோசனையில்படி செயல்பட்டு வருகிறது. 

சிறுவயதிலிருந்தே ஏரோ மாடலிங்கில் விருப்பம் உள்ளவர் நடிகர் அஜித். கையில் ரிமோட் கண்ட்ரோல் வைத்து, இந்தச் சிறிய ரக விமானங்களை இயக்குவதிலும், சோதனை செய்வதிலும் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இவர் தனது பொழுதைக் கழித்தார் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் தொழில் நுட்பக் கல்லூரியான மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி ( எம்.ஐ.டி.) நிர்வாகம் அழைத்தபோது இவர் விருப்பத்துடன் அதை ஏற்றுக் கொண்டார். 

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற "மெடிக்கல் எக்ஸ்பிரஸ் - 2018 யுஏவி சேலஞ்ச்' எனும் போட்டியில் எம்.ஐ.டி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர் அஜித், டீம் தக்‌ஷா குழுவினரின் ஆலோசகராகச் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். ஒவ்வொருமுறையும் இவர் கல்லூரிக்கு வந்தால் இவரது பயணப்படி ரூபாய் 1000 வழங்கப்படும். இதை இவர் அந்தக் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கே வழங்கி விட்டார். இறுதிச் சுற்று வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. 

இந்தத் துறையில் அஜித்துக்கு உள்ள நிபுணத்துவத்தைக் கணக்கில் கொண்டு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்திலிருந்து 30 கிலோமீட்டருக்கு அப்பால் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் தவிக்கும் நோயாளிகள் அல்லது தொலை தூர கிராமங்களில் உள்ள நோயாளிகளின் ரத்த மாதிரியைப் பெற்று வரும் வகையில் ஆளில்லா விமானத்தை உருவாக்குவது தான், இந்த போட்டிக்கான சவால். இதை எப்படி வடிவமைக்கலாம், எப்படி திரும்பவும் வரும் வகையில் செய்யலாம் என்று திட்டமிட்டு அதைச் செய்வதில் தான் இங்குள்ள மாணவர்களின் திறமையே இருக்கிறது. இந்த போட்டியில் 100 நாடுகள் பங்கு கொண்டன. அதில் சரிபாதிக்கு மேல் அதாவது 55 நாடுகள்தான் இரண்டாவது சுற்றுக்கே தகுதி பெற்றுள்ளன. தனியார் நிறுவனங்கள், ஆய்வு மையங்கள், அரசாங்கம் தான் இந்த போட்டிக்கு நிதி அளிக்கிறது. புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போட்டிக்கு தயாராகிக் கொண்டு வருகிறோம் என்றார் எம்.இ.டி. கல்லுரியின் ஏரோஸ்பேஸ் ஆய்வு மையத்தின் பொறுப்பு இயக்குநரான துணை பேராசிரியர் கே.செந்தில்குமார். 

அஜித் ஆலோசகராக உள்ள குழு, தமிழக அரசின் உயரிய விருதை வென்றிருப்பது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்தச் செய்தியை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவருகிறார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com