எங்களுக்கும் ராயல்டி வருவாயில் பங்கு வேண்டும்: இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள்

ராயல்டி விவகாரம் தொடர்பாக இளையராஜாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது...
எங்களுக்கும் ராயல்டி வருவாயில் பங்கு வேண்டும்: இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள்

பாடல்களுக்கான ராயல்டி தொகையை முறையாகத் தரக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தான் இசையமைத்த பாடல்களின் உரிமையும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் தனக்கே வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா கோரி வருகிறார். இதனால் இளையராஜா இசையமைத்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பாடல்களின் ராயல்டி மூலம் கிடைக்கும் வருவாய் கிடைக்காமல் உள்ளது. இளையராஜாவின் இசைக்கு முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் பலர் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். இளையராஜாவின் பரிந்துரையின்படியே ஆடியோ உரிமத்தை எக்கோ நிறுவனத்துக்குத் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள். அதில் வரும் 50 சதவிகித ராயல்டி பங்கு இதுவரை எந்தத் தயாரிப்பாளர்களுக்கும் கிடைத்ததில்லை. பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்கு உரியது. சம்பளம் வாங்கி இசையமைத்த இளையராஜாவுக்கு அந்த உரிமை கிடையாது. இதுவரை ரூ. 200 கோடி வரை தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய ராயல்டி பணம் வரவில்லை. கச்சேரி, காலர் டியூன், பாடல் ஒலிபரப்பு மூலமாகக் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவைக் கெளரவிப்பதற்காக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையராஜா - 75 என்கிற பெயரில் இசை விழா ஒன்று நடைபெறவுள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகங்களின் பிரபல நட்சத்திரங்களும் இளையராஜாவுடன் பணியாற்றிய இயக்குநர்களும் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்கள். இந்த இரு தேதிகளிலும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசை நிகழ்ச்சி தொடர்பாக தயாரிப்பாளர்கள் அனைவரையும் விஷால் கலந்தாலோசிக்கவில்லை என்று தயாரிப்பாளர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆனால், இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று விஷால் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது ராயல்டி விவகாரம் தொடர்பாக இளையராஜாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com