ரூ. 1.79 கோடி சம்பளப் பாக்கி: மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த அரவிந்த் சாமி!
By எழில் | Published on : 12th September 2018 05:46 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

2014-ல், மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளியானது சதுரங்கவேட்டை படம். வித்தியாசமான கதையால் ரசிகர்களிடம் அதிக கவனத்தைப் பெற்றது. தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளைப் பற்றி விவரித்தது அந்தப் படம். இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவானது.
நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்துள்ள படம் - சதுரங்க வேட்டை 2. இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நகரவாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்கவைத்து எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்கிற கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில் சதுரங்க வேட்டை 2 படத்தில் தனக்கான சம்பளப் பாக்கியான ரூ. 1.79 கோடியை ஆண்டுக்கு 18 சதவிகித வட்டியுடன் வழங்கவேண்டும் என்று தயாரிப்பாளர் மனோபாலா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அரவிந்த்சாமி. சம்பளப் பாக்கி தரும்வரை படத்தை வெளியிடத் தடை விதிக்கவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் படத்துக்குத் தடை விதிக்கவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தவில்லை. படவெளியீட்டைத் தடுப்பது எங்கள் நோக்கமல்ல, சம்பளப் பாக்கியைத் தரவேண்டும் என்று அரவிந்த்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு செப்டம்பர் 20-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் சம்பளப் பாக்கி தொடர்பாக மனோபாலா பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.