தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பாகக் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் இரு படங்களைத் தயாரிக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
கடந்த வாரம் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் கார்த்திக் சுப்புராஜ். மேயாத மான், மெர்குரி படங்களை அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார் ஈஷ்வர் கார்த்திக். இசை - சந்தோஷ் நாராயணன். கடந்த வருட தீபாவளிக்கு விஜய்யுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த சர்கார் படம் வெளியானது. அதன்பிறகு அவர் எந்தத் தமிழ்ப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. 9 மாதங்கள் கழித்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தமிழ்ப் படம் இது. அவருடைய 24-வது படம் என்பதால் இப்போதைக்கு கீர்த்திசுரேஷ்24 என அழைக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், அஸ்வின் கக்குமனு நடிக்கும் படத்தை ரதீந்திரன் ஆர். பிரசாத் இயக்குகிறார். இசை - பிரிதிவி சந்திரசேகர். ரதீந்திரன் இயக்கி இன்னும் வெளிவராத, இது வேதாளம் சொல்லும் கதை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அஸ்வின் கக்குமனு ஆகிய இருவரும் நடித்துள்ளார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இந்தப் படமும் அடுத்த வருடத் தொடக்கத்தில் வெளிவரவுள்ளது.