மோடி திரைப்பட வெளியீட்டுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

பார்வையாளர்களையும், வாக்காளர்களையும் கவரும் விதமாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே...
மோடி திரைப்பட வெளியீட்டுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

பிரதமர் மோடியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடித்துள்ள இந்தப் படத்துக்கு பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ளது.     

மக்களவை பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 18- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிஎம் நரேந்திர மோடி படம், தேர்தல் சமயத்தில் வெளிவருவதால் இந்தப் படம் அதிகக் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடுவதற்கு அதன் தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களுக்காக திரைப்பட வெளியீட்டை ஒத்திவைப்பதாகக் கூறினார்.

இந்நிலையில் இத்திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், "பார்வையாளர்களையும், வாக்காளர்களையும் கவரும் விதமாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களவைத் தேர்தல் முடிவுடையும் வரை இத்திரைப்படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு அதன் தயாரிப்பாளர் இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கூட பெறவில்லை; இந்த நிலையில், திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது ஏற்புடையதல்ல' என்று நீதிபதிகள் கூறினர்.

ஆனால், இத்திரைப்படத்தை ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிடுவதாக, திரைப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்து விட்டார் என்று மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் தணிக்கைச் சான்றிதழ் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், அவர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று கூறினர்.

நீதிபதிகள் மேலும் கூறியதாவது: திரைப்படம் வெளியாகும் முன்னரே, அந்த திரைப்படத்தின் ஒரு நகலை தங்களுக்கு அளிக்க உத்தரவிடுமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். தனிப்பட்ட ஒருவருக்கு ஒரு திரைப்படத்தின் நகலை அளிக்குமாறு நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்? மேலும், இந்த மனுவை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரிக்க இருக்கிறோம். அப்போது, இத்திரைப்படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் இருப்பதற்கான ஆதாரங்களை மனுதாரர் தரப்பு அளித்தால், திரைப்படத்தின் வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதிப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்தது. படத்துக்குத் தடை விதிப்பது குறித்து தணிக்கை வாரியமும் தேர்தல் ஆணையமும் முடிவெடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. படத்தின் உள்ளடக்கம் குறித்து தணிக்கை வாரியமும் பாஜகவுக்குப் பிரசாரம் செய்கிறதா என்பது குறித்து தேர்தல் ஆணையமும் ஆராய வேண்டும். அதை முன்வைத்து படத்தை வெளியிடலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com