சுடச்சுட

  

  27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘காக்கி சட்டை’ அணிந்துள்ள ரஜினி!

  By எழில்  |   Published on : 10th April 2019 05:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  darbar_pongal1

   

  சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.

  லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படம் அடுத்த வருட பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

  தர்பார் படத்தின் பூஜை மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ரஜினி, முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.

  இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளார் ரஜினி. இதற்கு முன்பு 5 தமிழ்ப் படங்களிலும் 6 ஹிந்திப் படங்களிலும் காக்கி சட்டை வேடத்தில் அவர் நடித்துள்ளார். அதுகுறித்த ஒரு பார்வை

  அன்புக்கு நான் அடிமை (1980)

  காக்கி சட்டை அணிந்து ரஜினி நடித்த முதல் படம் இது. திருடனாக இருக்கும் ரஜினி தவறுதலாகக் காவல்துறை அதிகாரியாக அடையாளம் காணப்படுகிறார். அதன்மூலம் காக்கி சட்டை மீது ரஜினிக்கு ஏற்படும் மதிப்பு கதையில் வெளிப்படுத்தப்படுகிறது. பில்லா படத்துக்குப் பிறகு வெளிவந்த படம் இது. 

  மூன்று முகம் (1982)

  காக்கி சட்டை அணிந்து ரஜினி நடித்த படங்களில் இது மிகவும் புகழ்பெற்றது. முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்த படமும் இதுதான். (32 வருடங்களுக்குப் பிறகு கோச்சடையான் படத்தில் மூன்று வேடங்களில் நடித்தார் ரஜினி). காவல் அதிகாரி வேடத்தில் ரஜினி அட்டகாசம் செய்த படமும் இதுவே. அலெக்ஸ் பாண்டியன் வேடத்தில் ரகளை செய்திருப்பார் ரஜினி. அதனால் இதே படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ரஜினியே நடித்தார். 

  கொடி பறக்குது (1988)

  கடலோர கவிதைகள், வேதம் புதிது படங்களுக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய படம் இது. 16 வயதினிலே படத்துக்குப் பிறகு ரஜினியும் பாரதிராஜாவும் கூட்டணி அமைத்த படம். 

  ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது. 

  நாட்டுக்கொரு நல்லவன் (1991)

  ரஜினி ரசிகர்களை மிகவும் ஏமாற்றிய படம் இது. தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் எடுக்கப்பட்டு ரஜினி, ஜுஹி சாவ்லா, குஷ்பு என முக்கிய நடிகர்கள் நடித்தும் இந்தப் படத்தை ரசிகர்கள் ஏற்றுகொள்ளவில்லை. 

  பாண்டியன் (1992)

  தர்பார் படத்துக்கு முன்பு தமிழில் ரஜினி கடைசியாக போலீஸ் வேடமிட்ட படம் இது. ஐபிஎஸ் அதிகாரியாக நடித்தார் ரஜினி. பாம்பே தாதா என்கிற கன்னட படத்தின் ரீமேக் இது. எஸ்.பி. முத்துராமன் இயக்கிய இந்தப் படம் கமலின் தேவர் மகனுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தது. 

  இந்தப் படத்தின் தோல்விக்குப் பிறகு எஸ்.பி. முத்துராமன் ஒரே ஒரு படம் மட்டுமே இயக்கினார். 1995-ல் தொட்டில் குழந்தை படத்துக்குப் பிறகு வேறெந்த படத்தையும் அவர் இயக்கவில்லை. ரஜினியோ இதற்குப் பிறகு கடந்த 27 ஆண்டுகளாகக் காவல் அதிகாரி வேடத்தில் நடிக்கவேயில்லை. 

  பாலிவுட்டில்... 

  John Jani Janardhan, Geraftaar, Dosti Dushmani, Phool Bane Angaray, Farishtay, Hum ஆகிய ஹிந்திப் படங்களில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார் ரஜினி. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai