என்னை ஏன் அப்படி அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லை: தர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி பேட்டி

உடனே தயாரிப்பாளருக்குப் போன் செய்து, என்னைக் கேட்காமல் எப்படி இதுபோலச் செய்யலாம் என்று கேள்வி எழுப்பினேன்...
என்னை ஏன் அப்படி அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லை: தர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி பேட்டி

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினி நடித்துள்ள 167-வது படம். ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. சுனில் ஷெட்டி, பிரதீக் பப்பர் போன்றோரும் நடித்துள்ளார்கள். ஜனவரி 9 அன்று தர்பார் வெளியாகவுள்ளது. இதனால் இந்தப் படம் பொங்கல் விடுமுறை தினங்களால் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தர்பார் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஜினி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்ததாவது:

எனக்கு போலீஸ் வேடங்களில் நடிப்பது பிடிக்காது. ஏனெனில் அந்த வேடத்துக்கு நிறைய பொறுப்புகள் இருக்கும். மிகவும் சீரியஸாக இருக்கவேண்டும். ஜாலியான கதாபாத்திரங்களில் நடிக்கவே பிடிக்கும். ஆனால், ஏ.ஆர். முருகதாஸ் வித்தியாசமான கதையுடன் வந்து என்னைச் சந்தித்தார். வழக்கமான போலீஸ் வேடம் கிடையாது. மிகவும் வித்தியாசமானது. காட்சியைப் படமாக்குவதிலும் அவருடைய கற்பனையும் மாறுபட்டவையாக இருக்கும். 

நான் எல்லா வகையான படங்களிலும் நடித்துவிட்டேன். நான் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். எனினும் திருநங்கை வேடத்தில் நடிக்க விருப்பப்படுகிறேன். 

இப்போதும் நான் தொடர்ந்து பணியாற்றுவதற்குக் காரணம் பணம் தான் (சிரிக்கிறார்). சீரியஸாகச் சொல்லவேண்டுமென்றால், சினிமா மீதான ஆர்வம் தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. 

ஒரு நடிகராக நான் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளேன் எனக் கேட்கிறீர்கள். ஆரம்பத்தில் நான் கூச்ச சுபாவம் உள்ளவனாக, பதற்றம் கொண்டவனாக இருந்தேன். மற்றப்படி எல்லாமே இயக்குநரின் கையில் தான் உள்ளது. நான் இயக்குநர்களின் நடிகன். எனக்குத் தரப்பட்ட காட்சியின் சூழலுக்கு ஏற்ப எதிர்வினையாற்றுவது தான் நடிப்பாகும். மற்றபடி நான் மாறியதாக நினைக்கவில்லை. 

என்னுடைய பெரிய ஊக்கம், அமிதாப் பச்சன் தான். கேமராவுக்கு முன்னால் மட்டுமல்ல, பின்பும் தான். எங்கள் நட்பை விளக்கும் பல முக்கியமான தருணங்கள் உள்ளன. அவருக்கு என்னைப் பிடிக்கும். நாங்கள் இருவரும் தமிழ்நாட்டில் இருந்தபோது, அவர் என்னிடம் சொன்னார், 60 வயதுக்குப் பிறகு மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மூன்று விஷயங்களை ஞாபகப்படுத்திக்கொள். தினமும் உடற்பயிற்சி செய். தொடர்ந்து வேலை செய். தினமும் வீட்டை விட்டு வெளியே சென்று விடு. அப்புறமாக, அரசியலுக்குள் நுழையாதே என்றார். சூழ்நிலை காரணமாக என்னால் மூன்றாம் அறிவுரையை மட்டும் கடைப்பிடிக்க முடியவில்லை என்றார் ரஜினி.

செய்தியாளர் சந்திப்பில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து ரஜினியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்ததாவது: இது சினிமா விழா. சினிமா விழாக்களில் நான் அரசியல் பேசுவது கிடையாது. என்னுடைய கருத்தை வேறொரு தளத்தில் கூறுகிறேன். இங்கு அல்ல. இதில் எனக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்து உள்ளது என்றார். அவர் மேலும் பேசியதாவது:

சூப்பர் ஸ்டார் என முதல் முதலில் அழைத்த அனுபவம் இது. நாற்பது வருடங்களுக்கு முன்பு, 80களில், என்னுடைய படம் ஒன்றை திரையரங்கில் பார்க்கிறேன். அதில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று இடம்பெற்றிருந்தது. உடனே தயாரிப்பாளருக்குப் போன் செய்து, என்னைக் கேட்காமல் எப்படி இதுபோலச் செய்யலாம் என்று கேள்வி எழுப்பினேன். மக்கள் என்னை சூப்பர் ஸ்டார் என அழைப்பார்கள் என்று நினைக்கவில்லை. இப்போதும் அப்படித்தான் எண்ணுகிறேன். என்னை ஏன் சூப்பர் ஸ்டார் என அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. 

சுனில் ஷெட்டியைப் பற்றிக் கூறவேண்டும். நான்கு வருடங்களுக்குப் பிறகு நடிக்கிறார். அவர் தந்தை உடல்நலமில்லாமல் இருந்தார். அவரைப் பார்த்துக்கொள்வதற்காக அனைத்து வாய்ப்புகளையும் ஏற்க மறுத்துவிட்டார். படத்தின் கடைசியில் நானும் சுனில் ஷெட்டியும் நேருக்கு நேர் மோதுவோம். அக்காட்சியில் அவர் அற்புதமாக நடித்துள்ளார் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com