ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் மலையாள நடிகர்கள்!

மம்மூட்டி உள்பட மலையாள நடிகர்கள் பலரும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகவும் ஜாமியா மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகவும்...
ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் மலையாள நடிகர்கள்!

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா். குடியுரிமைச் சட்டத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தமானது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெüத்தர்கள், சமணர்கள், பார்சிகள் ஆகிய 6 சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழிகோலியுள்ளது.

தெற்கு தில்லியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது சமீபத்தில் வன்முறை வெடித்தது. ஜாமியா பல்கலைக்கழகத்துக்கு அருகே உள்ள பிரண்ட்ஸ் காலனியில் மாணவா்கள் கூடி போராட்டம் நடத்தினா். அப்போது, திடீரென போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 4 டிடிசி பேருந்துகளும், 2 போலீஸ் வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறைக்கு தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் தான் காரணம் என்று தில்லி போலீஸார் குற்றம் சாட்டினர். கலவரம் வெடித்ததும், ஜாமியா பல்கலைக்கழகத்துக்குள் காவலர்கள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள், பணியாளர்களைத் தாக்கி வெளியேற்றியதாக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தர் குற்றம் சாட்டினார்.  

இந்நிலையில் பிரபல நடிகர் மம்மூட்டி உள்பட மலையாள நடிகர்கள் பலரும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகவும் ஜாமியா மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

பிரபல நடிகர் மம்மூட்டி ஃபேஸ்புக்கில் கூறியதாவது: ஜாதி, மதம் போன்ற பாகுபாடுகளைக் களைந்தால் தான் நம்மால் ஒரு தேசமாக முன்னேற முடியும். ஒற்றுமையைச் சிதைக்கும் எதையும் நாம் ஊக்கப்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளார். மலையாள நடிகர் பிருத்விராஜ், தில்லி மாணவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகர் பார்வதி, மாணவர்கள் மீதான தாக்குதலை நாம் அனுமதிக்கக் கூடாது என்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இவர்கள் தவிர துல்கர் சல்மான், ரிமா கல்லிங்கல், குஞ்சாக்கோ போபன் போன்றோரும் மாணவர்கள் போராட்டத்துக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். எனினும் பாஜக தலைவர் சோபா சுரேந்திரன், மலையாள நடிகர்களின் இக்கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிருதிவிராஜ் போன்ற நடிகர்கள், அவர்களுடைய ஆதரவு யாருக்கு - சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிவர்களுக்கா அல்லது அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கவுள்ள மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

மேலும், சிறந்த மலையாளப் படமாகத் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுடானி ஃப்ரம் நைஜீரியா படக்குழுவினர், தேசிய விருது விழாவைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். இப்படத்தின் இயக்குநர் ஜகாரியா முகமது ஃபேஸ்புக்கில் கூறியதாவது: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளார். இப்படத்தில் நடித்த சாவித்ரிக்கு, தேசிய விருதுக்கான நடுவர்களின் சிறப்பு விருதும் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com