கோவை, ஈரோடு, திருப்பூரில் விஸ்வாசம் பட வெளியீட்டுக்கான தடை நீக்கம்!

விஸ்வாசம் படம் தமிழகம் முழுவதும் நாளை எவ்விதச் சிக்கலும் இல்லாமல் வெளிவரவுள்ளது...
கோவை, ஈரோடு, திருப்பூரில் விஸ்வாசம் பட வெளியீட்டுக்கான தடை நீக்கம்!

அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி. நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தை  கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் வெளியிட நேற்று நீதிமன்றம் தடை விதித்தது.

விஸ்வாசம் பட விநியோக உரிமைக்காக ரூ. 1 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையென்பதால் கோவை, ஈரோடு, திருப்பூரில் விஸ்வாசம் பட வெளியீட்டுக்குத் தடை விதிக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றத்தில் சினிமா ஃபைனான்சியர் உமாபதி வழக்கு தொடர்ந்தார். தன்னிடம் விநியோகஸ்தர் சாய்பாபா பெற்ற ரூ. 1 கோடியில் ரூ. 20 லட்சம் மட்டும்தான் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள அசல் தொகையை வட்டியுடன் ரூ. 78 லட்சமாகத் திருப்பித் தரவேண்டும். அதுவரை படத்தை வெளியிடத் தடை விதிக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து விஸ்வாசம் படத்தை  கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் வெளியிட நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. 

இதையடுத்து விநியோகஸ்தர் சாய்பாபா தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. தடையை நீக்கவேண்டும் என்றும் ரூ. 78 லட்சத்தில் ரூ. 35 லட்சத்தில் நீதிமன்றத்தில் வழங்கத் தயாராக இருப்பதாகவும் மீதமுள்ள தொகையை அடுத்த நான்கு வாரங்களுக்குள் அளிப்பதாகவும் அவர் உத்தரவாதம் அளித்தார். இதை மனுவாகவும் நீதிமன்றத்தில் அளித்தார். ரூ. 35 லட்சத்துக்கான டிடியும் வழங்கப்பட்டது. இதையடுத்து கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் விஸ்வாசம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவளித்தது. மீதமுள்ள தொகையை 4 வாரங்களில் அளிக்கவேண்டும், இல்லாவிட்டால் சினிமா ஃபைனான்சியர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. 

இதையடுத்து விஸ்வாசம் படம் தமிழகம் முழுவதும் நாளை எவ்விதச் சிக்கலும் இல்லாமல் வெளிவரவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com