மலேசியாவில் ‘கடாரம் கொண்டான்’ படத்துக்குத் தடை: காரணம் என்ன?

ஒரு காட்சியில் காவல் நிலையத்திலேயே ஒரு மலேசிய காவலர் கொலை செய்யப்படுகிறார். அதை இங்கு ஏற்கமாட்டார்கள்... 
மலேசியாவில் ‘கடாரம் கொண்டான்’ படத்துக்குத் தடை: காரணம் என்ன?

தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம். செல்வாவின் அடுத்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதாநாயகியாக அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ளார். அபி ஹாசன், லேனா போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான்.

இந்நிலையில் கடாரம் கொண்டான் படம் உலகமெங்கும் கடந்த வாரம் வெளியானாலும் அது படமாக்கப்பட்ட பகுதியான மலேசியாவில் மட்டும் வெளியாகவில்லை. காரணம், மலேசிய தணிக்கைக் குழு இப்படத்தைத் தடை செய்துள்ளது.

இத்தகவலை கடாரம் கொண்டான் படத்தை மலேசியாவில் வெளியிடுவதாக இருந்த லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் ஏவி நிறுவனம் அறிவித்துள்ளது. மலேசிய தணிக்கைக் குழுவின் உத்தரவின்படி மலேசியாவில் வெளியிடமுடியவில்லை என்று அந்நிறுவனம் சமூகவலைத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கான காரணத்தை அந்நிறுவனம் வெளியிடவில்லையென்றாலும் கடாரம் கொண்டான் படத்தில் மலேசியக் காவல்துறை மோசமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தில் மலேசிய காவலர்கள் சிலர் குற்றவாளிகளுக்கு உதவுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கு அதிருப்தி தெரிவிக்கும் விதமாக மலேசிய தணிக்கைக் குழு படத்தைத் தடை செய்துள்ளதாக அறியப்படுகிறது.

இதுதவிர, மலேசியாவில் படமாக்கப்பட்ட சில காட்சிகளுக்குக் மலேசியக் காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் அங்குக் குற்றச் செயலாகப் பார்க்கப்படும். எனினும் மலேசியாவில் காட்சிகளைப் படமாக்க உதவிய டி சினிமா இச்செய்தியை மறுத்துள்ளது. ஆஸ்ட்ரோ உலகம் என்கிற மலேசிய ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரவி மாராஸ் கூறியதாவது:

மலேசியாவில் சட்டவிரோதமாகக் காட்சிகளைப் படமாக்கவில்லை. மலேசியாவில் காட்சிகளைப் படமாக்குவதற்குத் தேவையான எல்லா அனுமதிகளையும் நாங்கள் பெற்றுக்கொண்ட பிறகே படப்பிடிப்பை நடத்தினோம். மலேசியாவில் கபாலி, பில்லா போன்ற படங்களின் காட்சிகள் படமாக்கப்படுவதற்கு நாங்கள் உதவியுள்ளோம். அப்போது அப்படங்களுக்கு மலேசியத் தணிக்கைக் குழு எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. நான் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் ஒரு காட்சியில் காவல் நிலையத்திலேயே ஒரு மலேசிய காவலர் கொலை செய்யப்படுகிறார். அதை இங்கு ஏற்கமாட்டார்கள். மேலும் மலேசிய காவல்துறையைத் தவறாகக் காண்பிக்க இந்நாட்டு அரசு அனுமதிக்காது. வன்முறைக் காட்சிகள், ஊழலில் ஈடுபடும் காவலர்கள் தொடர்பான காட்சிகள் போன்றவற்றுக்கு இங்கு அனுமதி கிடைக்காது. இதை இயக்குநர் ராஜேஷ் எம். செல்வாவிடம் நான் கூறினேன். ஆனால் இங்குள்ள விதிமுறைகளை அவரால் எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தியா போல இங்கும் சில விஷயங்கள் நடக்கும் என நினைத்தார். எனக்குத் தெரிந்தவரை தணிக்கைக் குழு குறிப்பிட்ட எந்தவொரு வன்முறைக் காட்சிகளும் மலேசியாவில் படமாக்கப்படவில்லை. மலேசியக் காவல் நிலையம் போல இந்தியாவில் செட் அமைத்து அக்காட்சிகளைப் படமாக்கியிருக்கலாம். மலேசிய நடிகை ஒருவர் இந்தியாவுக்குச் சென்று நடித்துக் கொடுத்த விஷயம் எங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com