ஒரு சந்தோஷத்தின் கதவு மூடினால் இன்னொரு சந்தோஷத்தின் கதவு திறக்கிறது

இந்தியாவில் சீக்கிரமே பணம் சம்பாதிக்க மூன்று வழிகள் இருக்கின்றன. அதில் சினிமா, விளையாட்டு இரண்டும் பிரபலம்
ஒரு சந்தோஷத்தின் கதவு மூடினால் இன்னொரு சந்தோஷத்தின் கதவு திறக்கிறது

இந்தியாவில் சீக்கிரமே பணம் சம்பாதிக்க மூன்று வழிகள் இருக்கின்றன. அதில் சினிமா, விளையாட்டு இரண்டும் பிரபலம்... மற்றொன்று அரசியல். சினிமா, விளையாட்டில் நீங்கள் மக்களை ஏமாற்ற முடியாது. அதே  போன்று அரசியலில் பணம் சம்பாதிக்க அதிக நாள் காத்திருக்க வேண்டும். பொறுமை இல்லாதவர்களுக்கு இருக்கும் நாலாவது வழி... திருட்டு, கொள்ளை. அடுத்தவன் உழைப்பை வைத்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிற  எல்லாருமே இங்கே ஓர் அசுரகுருதான். இப்படித்தான் இந்தக் கதையை நான் வடிவமைத்தேன். நிச்சயம் எனக்கு இது ஓர் அடையாளத்தைக் கொடுக்கும்.' நம்பிக்கையாகப் பேசுகிறார் இயக்குநர் ராஜ்தீப். இயக்குநர் மோகன்ராஜாவின் மாணவர். அசுரகுரு படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார். 

சமீபத்தில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த நம்மூர் ரயில் கொள்ளை விவகாரம்தான் கதை என்று ஒரு பேச்சு இருக்கு....

அதுவும் உண்டு. அது பற்றி மட்டுமே இது இல்லை. சினிமாவில் ஹீரோ பில்டப் ஏற்றுவது கூட ஏமாற்று வேலைதான். உங்களை இருட்டு அறையில் உட்காரவைக்கிறோம். உங்களைவிட உயரமான, வெளிச்சமான ஓரிடத்தில் நாயகனைக் காட்டுகிறோம். நீங்கள் உங்களை அறியாமலேயே ஹீரோ மேல மதிப்பு வைக்க ஆரம்பித்து விடுவீர்கள். இது சின்ன சைக்காலஜி. இதில் அப்படி எதுவும் கிடையாது. அடிப்படையில் ஒரு செய்தியாகத்தான் இது என்னைக் கடந்து போனது. அந்தச் செய்தி என்னுள் சில தேடல்களை உண்டாக்கியது. அதை ஒரு நூல் பிடித்து  போய் பார்த்தால், அவ்வளவு சுவாரஸ்யங்கள் இருந்தன. என் படத்தைப் பார்த்தால் வாழ்க்கையின் போக்குகள் புரியும். ஒரு சந்தோஷத்தின் கதவு மூடினால் இன்னொரு சந்தோஷத்தின் கதவு திறக்கிறது. அது தெரியாமல் நாம் எப்போதும் மூடிய கதவையே முறைத்துப் பார்த்துக்கொண்டு நிற்கிறோம். இதில் இருப்பது பல சம்பவங்களின் சங்கிலித் தொடர்ச்சி. அதில் நிறைய சுவாரஸ்யமும், வாழ்க்கையில் தென்படுகிற அரிதான நகைச்சுவையும் உண்டு.

கதையின் உள்ளடக்கத்தை இன்னும் விரிவுப்படுத்தலாம்....

ஹாலிவுட்டில் ஹிஸ்ட் ஜானர் என்று ஒரு பாணி உண்டு. கொள்ளையடிப்பதற்கான திட்டங்கள் நிறைய இந்தப் படங்களில் இருக்கும். அது மாதிரி ஒரு படம் இயக்க நினைத்து எழுதியது தான் இது. இங்கே ஒருவனுக்குப் பணம் மீது அத்தனை வெறி. பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்தவன். எதற்காக அவனுக்கு இவ்வளவு வெறி, வேட்கை... இதைச் சொல்லுவது தான் படம். பணத்துக்கான அதிபதியாக சுக்ரனை சொல்லுவோம். சுக்ரனுக்கு இன்னொரு பெயர் அசுரகுரு. அதனால்தான் இந்தப் பெயரை வைத்தோம். பணம், மக்கள் மத்தியில் நெருக்கடியை உருவாக்கி வைத்திருக்கிறது. அன்பாக வாழ்வதை விட இங்கே பணக்காரனாக வாழத்தான் எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கொள்ளையர்கள், அவ்வளவு புத்திசாலிகள். நிலப்பரப்பு, மக்களோட மனநிலை, பிராந்தியத்தின் பொருளாதாரம் எல்லாத்தையும் கணித்துதான் வெளியே வருகிறார்கள்.அப்படிப்பட்ட ஒருவனின் கதைதான் இது. 

வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்...

இங்கே மனிதனாக இருப்பதை விட, பணக்காரனாக இருக்கத்தான் ஆசைப்படுகிறார்கள் என புரிந்து கொண்டேன். உலகமயமாக்கல் வந்த பின் நல்ல கல்விக்கும், தரமான மருத்துவத்துக்கும் பணம்தான் ஆதாரம் என்று ஆகிவிட்டது.  அரசாங்கப் பள்ளியில் படிப்பதை கேவலம் என்றும், அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதை ஆபத்து என்றும் மக்களை நினைக்க வைத்ததில் பணத்துக்குப் பெரும் பங்கு உண்டு. ஆழ்ந்துப் பார்த்தால் உலகத்தை வேட்டைக்காடாக மாற்றி விட்டது பணம். அதைத்தான் இங்கே சொல்லப் போகிறேன். எல்லாவற்றுக்கும் விலை வைக்க ஆரம்பித்ததால்தான் மனிதம் மட்டும் மலிவாகி விட்டது. பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால்,  நம் வாழ்க்கையில் பாதிப் பிரச்னைகள் இல்லாமல் போய் விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள்  கிடைப்பார்கள். நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள் கிடைப்பார்கள். சரிபாதி குற்றங்கள் தொலைந்து விடும். தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்குப் பணம் இல்லை. பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்கத் தெரிந்து விட்டால் வாழ்க்கையை ஜெயித்து விடலாம்.  நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும் போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இப்படிப் பணத்தைப் பற்றி இந்தக் கதை நிறையவே பேசும். 

விக்ரம் பிரபுவுக்கு அத்தியாவசிய ஹிட் தேவைப்படும் நேரம் இது...

அதை நானும் உணர்ந்திருக்கிறேன். அவரும் உணர்ந்து வேலை செய்திருக்கிறார். இந்தப் படம் வந்த பின் அசுரகுருவுக்கு முன் விக்ரம் பிரபு, அசுரகுருவுக்குப் பின் விக்ரம் பிரபு என பிரித்துப் பார்க்கலாம். அந்தளவுக்குக் கதை, நடிப்பு எல்லாவற்றிலுமே கவனம் செலுத்தியிருக்கிறோம். மகிமா நம்பியார்  டிடெக்டிவ்வாக வருகிறார். அவருக்குச் சாதாரணமான கேரக்டர் கிடையாது. அவருக்குப்  பெருமை தேடித்தரும் கேரக்டர் இது. படத்தில் விக்ரம் பிரபு, மகிமா இருவருக்குமே தனித்துவம் இருக்கிறது. இது மாதிரியான படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் இந்தப் படத்தில் காட்சிக்குக் காட்சி வருவார் மகிமா. யோகிபாபு முக்கியமான இடத்தில் வருகிறார். காமெடி என்பதை விட, கதையிலும் முக்கியப் பங்கு வகிக்கிறார். விசாரணை படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். இப்படி ஒவ்வொருத்தருக்கும் இந்தப் படத்தில் அவ்வளவு பங்கு இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com