நடிகர் சங்கத் தேர்தல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்?: பதிவாளர் விளக்கம்!

நீட்டிப்புக் காலத்துக்குள் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்ந்து தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....
நடிகர் சங்கத் தேர்தல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்?: பதிவாளர் விளக்கம்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். 

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. எனினும், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

இந்நிலையில் பாரதி பிரியன் உள்ளிட்ட 61 உறுப்பினர்களின் புகார் மனுவை விசாரித்த தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் தேர்தலை நிறுத்திவைக்க ஆணை பிறப்பித்துள்ளார். 

நாசர் அணி நிர்வாகத்தால் முறையான காரணமின்றி நீக்கப்பட்டதாகக் கூறி 61 சங்க உறுப்பினர்கள் பட்டியலை இணைத்து பாரதி பிரியன் என்பவர் புகார் அளித்தார். இந்தப் புகாரின்  அடிப்படையில் நடிகர் சங்கத்திடம் விளக்கம் கேட்டது சங்கங்கள் பதிவாளர் அலுவலகம். இதற்கு நாசர் - விஷால் தரப்பும் பதில் அளித்துள்ளது. 

இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. சங்கங்களின் பதிவாளர், நடிகர் சங்கத்துக்கு இதுகுறித்து அளித்துள்ள கடித்தத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 

விஷால் அளித்த விளக்கத்தில் 44 உறுப்பினர்கள் தொழில்முறை உறுப்பினர் பதவியிலிருந்து தொழில்முறை அல்லாத உறுப்பினர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் 4 உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களாகவும் 13 உறுப்பினர்கள் தொழில்முறை உறுப்பினர்களாகத் தொடர்வதாகவும் அவர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேற்படி நபர்கள் அனைவரையும் விசாரணைக்கு அழைத்து புகாரில் உண்மை உள்ளதா என்பது குறித்து விசாரணை செய்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உள்ள உறுப்பினர்களின் பட்டியல் இறுதி செய்யவேண்டி உள்ளது. 

நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 நவம்பரில் இருந்து 6 மாதங்களில் தேர்தல் நடத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றுள்ளார்கள். நீட்டிப்புக் காலத்துக்குள் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்ந்து தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சங்க நிர்வாகிகளின் பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களால் தேர்தல் தொடர்பாக எடுத்த முடிவின் நிலை குறித்தும் பரிசீலிக்கவேண்டி உள்ளது. மேற்படி சூழலில் சங்கத் தேர்தலை நடத்துவது ஏற்புடையதாக இல்லை. எனவே அனைத்து விவரங்கள் குறித்து தீர்வு காணும் வரை தேர்தல் குறித்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்க ஆணையிடப்படுகிறது என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com