ஆளுநரைச் சந்தித்தது ஏன்?: நடிகர் விஷால் பேட்டி!

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக  பாண்டவர் அணியினர், தமிழக ஆளுநர் பன்வாரிலாலைச் சந்தித்துப் பேசியுள்ளார்கள்...
ஆளுநரைச் சந்தித்தது ஏன்?: நடிகர் விஷால் பேட்டி!

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக  பாண்டவர் அணியினர், தமிழக ஆளுநர் பன்வாரிலாலைச் சந்தித்துப் பேசியுள்ளார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன.  இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ள அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்கு அருகில் தமிழக அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோரின் குடியிருப்புகள் உள்ளன. தேர்தலின்போது அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. எனவே தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலை விட நடிகர் சங்கத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நடிகர் சங்கத் தேர்தலை விட பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியமானது. அடையாறு பகுதியில் பல முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாகும். எனவே அந்தப் பகுதியில் உள்ள எம்ஜிஆர்- ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என கூறினார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ கல்லூரி வளாகம், கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற இடங்களில் தேர்தலை நடத்தலாமே என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு (ஜூன் 19) ஒத்திவைத்தார்.

இந்தச் சூழலில் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்துப் பேசினார்கள்.

ஆளுநரைச் சந்தித்த பிறகு விஷால் பேட்டியளித்ததாவது: நடிகர் சங்கத் தேர்தல் நியாயமான முறையில் பாதுகாப்புடன் நடக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com