மலிவான உத்திகள் மூலம் புகழ் பெற எண்ணியுள்ளார்: ராதாரவிக்கு நடிகை நயன்தாரா கண்டனம்!

இதுபோன்ற மோசமான பேச்சுகளுக்குப் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டும் கைத்தட்டல்களும் கிடைப்பது அதிர்ச்சியளிக்கிறது...
மலிவான உத்திகள் மூலம் புகழ் பெற எண்ணியுள்ளார்: ராதாரவிக்கு நடிகை நயன்தாரா கண்டனம்!

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மூத்த நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து அநாகரிகமாகப் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் ராதாரவியின் சர்ச்சைப் பேச்சுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக அறிவித்தது. 

பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: 

பொதுவாக நான் அரிதாகவே அறிக்கை வெளியிடுவேன். என் தொழில் சார்ந்த பணிகள் பேசவேண்டும் என எண்ணுவேன். இப்போது நீண்ட விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. முதலில் என்னைப் பற்றி மோசமாகப் பேசிய ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. 

ராதாரவி மற்றும் அவரைப் போன்ற பெண்கள் வெறுப்பாளர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, அவர்களும் ஒரு பெண்ணால் இந்த உலகத்துக்கு வந்தவர்கள்தாம். பெண்களின் நிலையைக் கீழிறக்கியும் மோசமான கருத்துகளால் பேசுவதாலும் இவர்கள் ஆணுக்குரிய பெருமையை அடைகிறார்கள். முன்தீர்மானத்துடன் இவர்கள் பெண்களை நடத்துவதைக் கண்டு வருந்துகிறேன். திரையுலகில் ஏராளமான அனுபவம் உள்ள ராதாரவி இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். ஆனால் பெண் வெறுப்பாளர்களின் ரோல் மாடல் பதவியை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். பொது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வரும் இந்த நேரத்தில் இதுபோன்ற சர்ச்சைகள் பெண்களுக்குப் பிரச்னைகளாக உள்ளன. நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் இதுபோன்று மலிவான உத்திகள் மூலம், புகழ் பெற ராதாரவி போன்ற நடிகர்கள் எண்ணுகிறார்கள். 

இதுபோன்ற மோசமான பேச்சுகளுக்குப் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டும் கைத்தட்டல்களும் கிடைப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெண்களைக் கீழ்த்தரமாகப் பேசும் பேச்சுகளுக்கு பார்வையாளர்கள் பாராட்டு தெரிவிக்கும்வரை ராதாரவி போன்ற பேச்சாளர்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டுதான் இருப்பார்கள். ராதாரவி போன்றவர்களின் நடத்தையை ஆதரிக்கவேண்டாம் என என் ரசிகர்கள் மற்றும் நல்ல எண்ணங்களுடைய குடிமகன்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறிக்கையின்மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவும் குறிப்பாக என்னைப் பற்றியும் பேசிய ராதாரவியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழ்நாட்டில் நல்ல வாய்ப்புகளையும் நல்ல ரசிகர்களையும் அளித்து கடவுள் என் மீது கருணை காட்டியுள்ளார். நான் இதற்குப் பிறகும் சீதா, பேய், கடவுள், நண்பர், மனைவி, காதலி எனப் பல வேடங்களில் நடிப்பேன். என் ரசிகர்களுக்கு அதிகபட்சப் பொழுதுபோக்கு அளிக்கவேண்டும் என்பதே என் எண்ணம். 

கடைசியாக நடிகர் சங்கத்துக்கு என் கோரிக்கை - உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஐசிசி அமைப்பை உருவாக்குவீர்களா? அப்படி உருவாக்கி, விசாகா வழிகாட்டுதலின்படி விசாரணைக் குழு அமைப்பீர்களா என்று அறிக்கையில் நயன்தாரா கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com