Enable Javscript for better performance
Siva Karthigeyan's Mr.Local Film review | Mr.Local திரைப்பட விமர்சனம்- Dinamani

சுடச்சுட

  

  சிவகார்த்திகேயனின் ‘Mr.லோக்கல்’திரை விமரிசனம்

  By சுரேஷ் கண்ணன்  |   Published on : 18th May 2019 03:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  MrLocal_New

  ‘எல்லாவற்றிலும் டாஸ்மாக் காட்சிகள் இருக்கின்றன’, ‘பெண்களை மலினமாக கிண்டல் செய்யும் காட்சிகள் இருக்கின்றன’, ‘பொறுப்பில்லாத ஹீரோக்களாக இருக்கிறார்கள்’ என்று எம்.ராஜேஷ் இயக்கும் திரைப்படங்களின் மீது தொடர்ச்சியாக பல புகார்கள், குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. என்றாலும் அவரது திரைப்படங்களுக்கு என பிரத்யேகமான ரசிகர் வட்டம் உண்டு. சமகால இளையதலைமுறையின் ‘கலாய்ப்பு’ மனோபாவத்தை தனது திரைப்படங்களின் காட்சிகளிலும் வசனங்களிலும் கச்சிதமாக வடிவமைப்பவர் எம்.ராஜேஷ். இதன் உச்சம் என்று ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தைச் சொல்லலாம். வாழ்க்கையில் எந்தவிதமான லட்சியமும் இலக்கும் அல்லாத ஒரு பொறுப்பில்லாத இளைஞனின் பாத்திரத்தை ஆர்யா சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். 

  இதைப் போலவே சிவகார்த்திகேயனுக்கும் வளரிளம் பருவத்தினர் முதற்கொண்டு கல்லூரி மாணவிகள் வரை இளைய தலைமுறையின் பிரத்யேகமான ரசிகர் வட்டம் உண்டு. சமீபகாலமாக ‘மாஸ் ஹீரோ’ என்கிற நிலைக்கு தன்னை இவர் உயர்த்திக் கொள்ள விரும்புகிறார் என்றாலும் ‘அடுத்த வீட்டுப் பையன்’ என்கிற எளிமையான பிம்பம் இன்னமும் சிவகார்த்திகேயன் மீது அழுத்தமாகப் படிந்திருக்கிறது.

  கடந்த கால நாயகர்களான மோகன், முரளி போன்று ‘மாஸ் ஹீரோ’க்களின் சாயல் அதிகமில்லாத எளிய, இயல்பான நாயக பிம்பத்தை சிவகார்த்திகேயன் அடைந்திருக்கிறார். எனவே, எம்.ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் என்று இந்த இரண்டு விசேஷமான அம்சங்களும் இணையும் போது ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மாதிரி இன்னொரு அட்டகாசமான திரைப்படமாக ‘மிஸ்டர்.லோக்கல்’ அமையக் கூடும் என்று நாம் எதிர்பார்ப்பதில் தவறேதும் இருக்க முடியாது.

  ஆனால் அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் கருணையேயில்லாமல் அடித்து நொறுக்கியதோடு மட்டுமின்றி மிக மிகச் சலிப்பூட்டும் ஒரு திரைப்படத்தைத் தந்து ரசிகர்களை கடுமையாக ஏமாற்றியிருக்கிறது இந்தக் கூட்டணி. 

  பணக்காரப் பின்னணியிலிருந்து வரும் திமிர் பிடித்த நாயகி, எளிய, நடுத்தர வர்க்கப் பின்னணியிலிருந்து வரும் நாயகன். இவர்களுக்கு இடையேயான மோதலும் காதலும் என்பது சினிமாவிற்கு மிக மிக பழக்கமான ஒரு கதையம்சம். தமிழ் சினிமாவின் பெரும்பான்மையான பார்வையாளர் வட்டம் என்பது எளிய, நடுத்தர வர்க்க பின்னணியைக் கொண்டதுதான். எனவே நாயகன் வெளிப்படுத்தும் சவால்களை, நையாண்டிகளை அவர்கள் மனதிற்கு நெருக்கமாக உணர்வார்கள். படத்தையும் வெற்றியடையச் செய்வார்கள். ‘மன்னன்’, ‘மாப்பிள்ளை’ போன்று இந்த வகைமையில் இதற்கு முன்பு ரஜினியே பல ‘ஹிட்’களைத் தந்துள்ளார். இப்படி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பழக்கமான, வெற்றிக்கு உத்தரவாதமான ஒரு கதையமைப்பை வைத்துக் கொண்டு இத்தனை சுமாரான, சலிப்பூட்டும் ஒரு திரைப்படத்தை ராஜேஷூம் சிவகார்த்திகேயனும் தருவார்கள் என்பது அதிர்ச்சியாக மட்டுமல்ல, ஆச்சரியமாகவும் இருக்கிறது.

  பிரான்ஸ் நாட்டின் சிறையில் ஒரு குற்றவாளியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘தனது இந்த நிலைமைக்குக் காரணம், தான் விரும்பிய ஒரு பெண்தான்’ என்று தன் கதையை காவலாளியிடம் சொல்கிறார். ‘பிளாஷ்பேக்கில்’ கதை நகர்கிறது. 

  சென்னையில், கார் விற்கும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சித் தொடர்களை உருவாக்கும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் நயன்தாரா. வாகனங்கள் உரசிக் கொள்ளும் ஒரு சிறிய விபத்தின் மூலமாக இருவரின் அறிமுகம் நிகழ்கிறது. நயன்தாராவின் பணக்காரத் திமிர், சிவகார்த்திகேயனுக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே இருவரின் மோதலும் பல காட்சிகளில் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒருநிலையில் நயன்தாராவின் மீது தான் வைத்திருக்கும் காதலை உணர்கிறார் சிவகார்த்திகேயன். 

  அவருடைய காதல் ஜெயித்ததா, அவர் சிறைக்குச் செல்லும் சூழல் எதனால் ஏற்பட்டது என்பதை மீதமுள்ள காட்சிகள் விவரிக்கின்றன. 

  கீழ்நடுத்தர வர்க்க நாயகன் என்னும் பின்னணிக்கு வழக்கம் போல் கச்சிதமாகப் பொருந்துகிறார் சிவகார்த்திகேயன். தனது பிரத்யேகமான நகைச்சுவையிலும் இவர் குறை வைக்கவில்லை. நடனம், சண்டைக்காட்சி என்று இதர விஷயங்களிலும் ஒரு முன்னணி நாயகனுக்குரிய அம்சங்களை சரியாகவே நிறைவேற்றியிருக்கிறார். ஆனால் திரைக்கதை மிக பலவீனமாக இருப்பதால் இவருடைய உழைப்பு மொத்தமுமே வீணாகியிருக்கிறது.  

  நாயகர்களால் நிரம்பிய தமிழ் சினிமாவை உடைத்துக் கொண்டு பெண் மையப் பாத்திரங்களில் நடித்து தொடர்ந்து வெற்றியைத் தந்து கொண்டிருந்தவர் நயன்தாரா. ஆனால் இதில் இவர் ஏற்றிருப்பது வழக்கமான ‘நாயகி’ பாத்திரம். பெரும்பாலான காட்சிகளில் நாயகனை முறைத்துக் கொண்டு நிற்பதைத் தவிர வேறு ஏதும் பணியே இவருக்கு இல்லை. வழக்கமான நாயகி பாத்திரங்களிலிருந்து நயன்தாரா விலக வேண்டிய தருணம் இது என்பதை முதிர்ச்சியை அடைந்து கொண்டிருக்கும் அவருடைய முகம் உணர்த்துகிறது. 

  சரண்யா பொன்வண்ணன் வழக்கமாக செய்யும் பாத்திரத்தை இதில் இட்டு நிரப்புகிறார் ராதிகா சரத்குமார். ரோபோ ஷங்கர், யோகி பாபு, சதீஷ் போன்ற நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் பார்வையாளர்களை சிரிக்க வைக்கத் திணறுகிறார்கள். ராஜேஷ் திரைப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சந்தானம் இதில் இல்லாத குறை நன்றாகத் தெரிகிறது. 

  தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கிறது. ஒரு வெகுசன திரைப்படத்திற்கு தேவையான விஷயங்களை திறம்பட செய்து தனது பங்களிப்பை சிறப்பாகத் தந்துள்ளார். ‘ஹிப்ஹாப் தமிழா’வின் இசையில் பாடல்கள் அதிகம் கவரவில்லை. ‘டக்குன்னு டக்குன்னு’ பாடல் மட்டும் சற்று கேட்கும்படியாக இருக்கிறது. ஒரு மாஸ் ஹீரோக்குரிய ரகளையான பின்னணி இசையைத் தந்து சிவகார்த்திகேயனின் சில காட்சிகளை உயர்த்த முயன்றிருந்தாலும் காட்சிகள் வலுவாக அமையாததால் அவை ஈடேறாமல் போகின்றன.

  கல்லூரி மாணவிகள், மாணவர்கள், சிறார்கள் போன்ற இளைய தலைமுறையினரிடம் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் பொதுவான பார்வையாளர்களை தனது எளிய, இயல்பான நகைச்சுவையால் கவர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர்கள்தான் அவரது அடிப்படையான பலமே. ஆனால் இந்த திரைப்படத்தில் அவர்களைக் கவரும் காட்சிகள் எதுவுமே இல்லை. ஓர் இயல்பான நாயகனுக்கும் மாஸ் ஹீரோவாக நகர்வதற்கும் இடையிலான தத்தளிப்புக் காலக்கட்டத்தில் சிவகார்த்திகேயன். இருக்கிறார் என்று தோன்றுகிறது. அவர் மாஸ் ஹீரோவாக முன்நகர்வதில் தவறில்லைதான். ஆனால் அதே சமயத்தில் தனது அடிப்படையான பலம் என்பது இயல்பான நகைச்சுவைதான் என்பதை அவர் மறந்து விடக்கூடாது. இதை வலுவாக உணர்த்துகிறது ‘மிஸ்டர் லோக்கல்’. 

  ‘சிவா மனசுல சக்தி’ ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆகிய திரைப்படங்களில் ராஜேஷின் நையாண்டியும் நக்கலும் கதையம்சத்தோடு சரியாக கூடி வந்திருந்தது. விட்டேற்றியான நகைச்சுவைக்காட்சிகளாக இருந்தாலும் ஓர் உணர்ச்சிகரமான மெல்லிய இழை அந்தக் காட்சிகளை ஒன்றிணைத்து அந்தப் படங்களின் சிறப்பிற்கு அடித்தளமாக அமைந்தது. ஆனால் ‘மிஸ்டர்.லோக்கலில்’ எந்தப் பாத்திரத்துடனும் நம்மால் உணர்ச்சிகரமாக ஒன்ற முடியவில்லை என்பது ஆதாரமான குறை. அதுவே இந்த திரைப்படத்தை ரசிப்பதற்கும் பெரும் தடையாக இருக்கிறது. 

  சிவகார்த்திகேயனைப் போலவே ராஜேஷூம் தனது அடுத்த அடியை கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்கிற எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது, ‘மிஸ்டர்.லோக்கல்’.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai