ஐஸ்வர்யா ராயைக் கேவலப்படுத்தும் மீமைப் பகிர்ந்த விவேக் ஓப்ராய்: ரசிகர்கள் கடும் கண்டனம்!

ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிக்கும் இந்த மீமை விவேக் ஓப்ராயே பகிர்ந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்...
ஐஸ்வர்யா ராயைக் கேவலப்படுத்தும் மீமைப் பகிர்ந்த விவேக் ஓப்ராய்: ரசிகர்கள் கடும் கண்டனம்!

மக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. மொத்தம் 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்தக் கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றும் என்று சில முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்ந்நிலையில் இந்த வாக்குக் கணிப்பு குறித்த அநாகரிகமான மீம் ஒன்றைப் பகிர்ந்து ரசிகர்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய். அவர் பகிர்ந்த மீமில், ஐஸ்வர்யா ராய் - சல்மான் கான் உள்ள புகைப்படத்தைக் கருத்துக் கணிப்பு என்றும் ஐஸ்வர்யா ராய் - விவேக் ஓப்ராய் உள்ள படத்தை வாக்குக் கணிப்பு என்றும் தேர்தல் முடிவுகள் என ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் - இந்தத் தம்பதியரின் மகள் ஆகியோரைக் கொண்ட படத்தையும் குறிப்பிட்டிருந்தது. 

ஐஸ்வர்யா ராய் - சல்மான் குறித்த காதல் செய்திகள் 2000-ம் ஆண்டு வெளிவந்தன. ஆனால் இருவரும் 2002-ல் பிரிந்தார்கள். பிறகு ஐஸ்வர்யா ராய், விவேக் ஓப்ராயைக் காதலிப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் இது பற்றி ஐஸ்வர்யா ராய் எதுவும் பேசியதில்லை. 2007-ல் அபிஷேக் பச்சனை மணந்தார் ஐஸ்வர்யா ராய். இருவருக்கும் ஆராத்யா என்கிற மகள் உண்டு. 

ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிக்கும் இந்த மீமை விவேக் ஓப்ராயே பகிர்ந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். ஹாஹா.. கிரியேட்டிவ், அரசியல் எதுவும் இல்லை. இதுதான் வாழ்க்கை என்று அந்த மீமைப் பகிர்ந்து விளக்கத்துடன் ட்வீட் செய்திருந்தார் விவேக் ஒப்ராய். ஆனால் ரசிகர்கள் பலரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோன்ற அநாகரீகமான செயலில் இறங்கவேண்டாம் என்று விவேக் ஓப்ராய்க்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com