Enable Javscript for better performance
controversy over othserupu movie ! குறுநாவலில் இருந்து இன்ஸ்பைர் ஆகி எடுக்கப்பட்டதா ஒத்தச்செருப்பு?- Dinamani

சுடச்சுட

  

  புலம்பெயர் எழுத்தாளரின் குறுநாவலில் இருந்து இன்ஸ்பைர் ஆகி ஒத்தச்செருப்பு திரைப்படம் எடுத்தாரா பார்த்திபன்? 

  By DIN  |   Published on : 03rd October 2019 04:43 PM  |   அ+அ அ-   |    |  

  controversy over othserupu movie

  நடிகர், இயக்குனர் பார்த்திபன்

   

  சென்னை: புலம்பெயர் எழுத்தாளர் கருணாகரமூர்த்தியின் குறுநாவலில் இருந்து இன்ஸ்பைர் ஆகி ஒத்தச்செருப்பு திரைப்படத்தை நடிகர் பார்த்திபன் எடுத்தாரா  என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

  ஈழத்தைச் சேர்த்த எழுத்தாளர் பொன்னையா கருணாகரமூர்த்தி.  ஈழப்போரின் உச்சகட்டத்தில் இலங்கையில் இருந்து வெளியேறிய அவர் தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். நடிகர் இயக்குநர் பார்த்திபனின் ஒத்தச்செருப்பு திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில், கருணாகரமூர்த்தி ஊடகங்களுக்கு "என்   ‘சூரியனிலிருந்து வந்தவர்கள்’ குறுநாவலும் பார்த்திபனின் ஒத்தச்செருப்பு இல 7 சினிமாவும்" என்ற தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

  ‘சூரியனிலிருந்து வந்தவர்கள்’ என்றொரு குறுநாவலை நான் 2000 ஆண்டு எழுதியிருந்தேன். விடுதலைப்புலிகளின் மனிதவுரிமைகளுக்கெதிரான பல  செயற்பாடுகளை அந்நாவல் விமர்சிப்பதால் அப்போது அதனைப் பிரசுரிப்பதற்குப் பத்திரிகைகள் தயங்கின. பின்னர் அதனை ஷோபாசக்தியும் சுகனும் சேர்ந்து தொகுத்த கருப்பு இலக்கியமலரில் 2003 வெளியிட்டனர்.

   

  அதில் ஒரேயொரு ஆண்பாத்திரம், இலேசான மனப்பிறழ்வு கொண்டவர், அவருக்கு 'காசி' என்று பெயர். எப்போதும் கையில் தன் உயரமொத்த ஒரு  ‘கழி’யை வைத்திருப்பார். அவர் விரும்பும் வேளைகளில் முன்னால் ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ தரையில்  ஊன்றிவிட்டு அதையே ஒலிவாங்கியாக எண்ணிப் பேசத் தொடங்கிவிடுவார். அரசியல், ஆன்மீகம், சமூகவியல், அறிவியல், தர்க்கம், மெய்யியல் என்று செறிவாகவும் மணிக்கணக்காகவும் அவரது பேச்சுக்கள் நீளும். பெம்மானின் தொண்டைத்தண்ணீர் வற்றி உலர்ந்து குரல் வராதபோது பேச்சை நிறுத்திவிட்டு  அடுத்த ஊருக்குப் போய்விடுவார்.சாப்பாட்டைக் கருதி அவரை எவ்வூரிலும் கோவில் வட்டகைகளிலேயே காணலாம்.

  அந்நாவல் எனது ஒரு பரிசோதனை முயற்சி. அதில்  நிறைய உரையாடல்கள் இடம்பெறும், அவ்வுரையாடல்களாலேயே நாவல் முழுவதும் நகரும், ஆனால் பிற பாத்திரங்கள் எவரும் அதில் வெளிப்படுத்தப்பட மாட்டார்கள்.மக்களின் பலவகையான கருத்துக்களும் படைப்புள் இருக்கும்,  ஆனாலும் அப்பாத்திரம் தன்னை வெளிப்படுத்தினால் எதிர்நோக்கும் அபாயத்தை வாசகன் உணர்ந்துகொள்வான்.

  சமீபத்தில்  பார்த்திபனின்  ‘ஒத்தச்செருப்பு இல 7’ என்றொரு படம் வெளிவந்திருக்கிறது. அதுவும் எந் நாவலைப்போலத்தான். அதில் வரும், மாசிலாமணி எனும் மனநிலை அவ்வப்போது பிறழ்ந்த ஒரு பாத்திரம் (பார்த்திபனே) மட்டும் வரும்/பேசும். ஒரு கொலைக்குற்றத்துக்காகச் சந்தேகத்தின்பேரில் கைதாகும் அவரின் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகள், அதற்கு அவர் சொல்லும் தமாஷான பதில்கள், அவரின் நடத்தைகள் என்பவற்றினைக் காட்சிப்படுத்தல் மூலம் படம் முழுவதும் நகர்கின்றது.

  எனது நாவல் ஒரு அப்பாவி மனிதன் மேல் பிரயோகிக்கப்படும் வன்முறையை மையப்படுத்தியது. 102 நிமிடப் படத்தில் 95 நிமிடங்களும்  ஒற்றை நபராகப்  பார்த்திபனையே பார்த்துக்கொண்டிருப்பது சலிப்பூட்டுகிறது. வேண்டுமானால் அதை ஒரு  ‘திறில்லர்’ என்று வகைப்படுத்தலாம். வேறு பாத்திரங்கள் எதுவும் இல்லாது கதையை நகர்த்திச்செல்லும் அந்த உத்தி என்னுடையது. பார்த்திபன் நிறைய வாசிப்பவர். அவர் ஒருவேளை எனது நாவலை வாசித்து அதனால் Inspire / அகத்தூண்டப்பெற்று  அப்படத்தை இயக்கியிருக்கலாம்.   ‘சூரியனிலிருந்து வந்தவர்களை’ அவர் படிக்காமலேகூட  ‘ஒத்தச்செருப்பு இல 7’ ஐ இயக்கியிருக்கலாம். ஒரேமாதிரியான கற்பனைகள் இருவருக்கு ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்பதை நான் நம்புபவன். உத்திக்கு உரிமை கோரித்  தீர்ப்பாயம் எதையும் நாடும் உத்தேசம் எதுவுமில்லை.

  நான்தான் 1987 ம் ஆண்டு  அவரது முதற்படமான ‘ புதியபாதையை’   பெர்லினில் வெளியிட்டேன், அதன்மூலம் ஒருவேளை என்னை அவர் அறிந்துமிருக்கலாம்.  'சூரியநிலிருந்து வந்தவர்கள்’ குறுநாவல் ஜனவரி 2020 இல் வெளிவரவிருக்கும் என் ‘வெய்யில் நீர்’ குறுநாவல் தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai