Enable Javscript for better performance
தாழ்வு மனப்பான்மையால் தான் ஆஸ்கர் விருதுக்கு ஆசைப்படுகிறோம்!- Dinamani

சுடச்சுட

  

  தாழ்வு மனப்பான்மையால் தான் ஆஸ்கர் விருதுக்கு ஆசைப்படுகிறோம்!

  By எழில்  |   Published on : 09th October 2019 03:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  oththa_seruppu_newnew1xx

   

  ஆர். பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள படம் - ஒத்த செருப்பு. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - ராம்ஜி. சமீபத்தில் இந்தப் படம் வெளியானது.

  ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக கல்லி பாய் என்கிற ஹிந்திப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் ஆஸ்கருக்கு அனுப்பப்படாததற்குப் பலரும் விமரிசனம் செய்துள்ளார்கள். பார்த்திபனும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தாழ்வு மனப்பான்மையால் தான் ஆஸ்கர் விருதுக்கு ஆசைப்படுகிறோம் என நியாண்டர் செல்வன் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார். இவர், ஃபேஸ்புக்கில் ‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’ எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். 

  ஆஸ்கர் விருது குறித்து அவர் எழுதியதாவது:

  தாழ்வு மனப்பான்மை வியாதி நம்மைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருப்பதற்கான லேட்டஸ்ட் உதாரணம்தான், ஒத்த செருப்பு - ஆஸ்கர் சர்ச்சைகள்.

  ஆஸ்கருக்குத் தகுதி பெற 20-ம் தேதிக்குள் படம் ரிலீஸ் ஆகவேண்டும் என மெனக்கெட்டு ரிலீஸ் செய்து கையைச் சுட்டுக்கொள்கிறார் பார்த்திபன். அப்படி ரிலீஸ் செய்தும் படத்தை மத்திய அரசு ஆஸ்காருக்கு அனுப்பவில்லை.

  இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம், ஆஸ்கார் விருது என்பது தனியார் அமைப்பின் விருது. 

  தனியார் அமைப்பின் விருதைப் பெற மத்திய அரசு ஏன் சிபாரிசு செய்யவேண்டும்?

  அமெரிக்கப் படங்களை ஆஸ்கருக்கு அனுப்ப டிரம்ப்பின் ஒப்புதல் எதுவும் அவசியமில்லை. லாஸ் ஏஞ்சல்ஸில் 3 நாள்கள் படம் ஓடியிருந்தால் தானாக அப்படம் ஆஸ்கருக்குத் தகுதி பெற்றுவிடும் என்பதுதான் விதி. அதனால் ஆங்கில மொக்கைப் படங்கள் டிரம்ப்பின் அனுமதியைப் பெறாமலே ஆஸ்கருக்கு நேரடியாகச் செல்ல பார்த்திபனும் பாரதிராஜாவும் இந்திய தேர்வு கமிட்டி உறுப்பினர்களுக்குப் பாதபூஜை செய்துதான் ஆஸ்கருக்குச் செல்ல பரிந்துரை பெற வேண்டும். அதிலும் ஒரு படத்தைத் தான் அனுப்புவார்கள்.

  பிரச்னை, இந்திய அரசின் அனுமதியை பெறவேண்டும் என்பதில் இல்லை! ஆஸ்கர் விருதுக்கான தகுதியே ஆங்கில/அமெரிக்கப் படங்களை வைத்தே நிர்ணயிக்கப்பட்டது என்பதுதான். லாஸ் ஏஞ்சல்ஸில் 3 நாள்கள் ஓடக்கூடிய படம் என்றால் இந்திய, ஆப்பிரிக்கப் படங்கள் எப்படித் தேறும்?

  ஆஸ்கர் விருது, அமெரிக்கப் படங்களுக்கு அமெரிக்கர்கள் கொடுக்கும் விருது. அது ஒன்றும் உலகத்தரம் வாய்ந்த படங்களுக்கான விருது அல்ல. ஹாலிவுட் படங்களுக்கு ஹாலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள் கொடுத்துக்கொள்ளும் விருது. விருது கமிட்டி நடுவர்கள் முழுக்க அமெரிக்கர்கள். அவர்களுக்கு பார்த்திபனையும் தெரியாது, பாரதிராஜாவையும் தெரியாது. தமிழும் தெரியாது. சென்னை எங்கே என மேப்பில் கூடக் காட்டத் தெரியாது. 16 வயதினிலே மாதிரியான படத்தின் மண் சார்ந்த கதை நுணுக்கங்கள், மனித இயல்புகள் எல்லாம் அவர்களுக்கு எங்கே பிடிபடும்? "ஆத்தா நாயை வளர்க்கல, என்னைதான் வளர்த்தா" எனும் வசனம் அவர்களுக்கு எப்படிப் புரியும்? அவர்களைப் பொறுத்தவரை நாய் குழந்தை மாதிரி. நாயை வேலை வாங்கினால் மிருக நல சங்கம் வழக்குப் போடும் என்பது மாதிரியான புரிதலில் இருப்பவர்கள்.

  ஃபிலிம்ஃபேர் விருது வாங்கவேண்டும் என அமெரிக்கப் படங்கள் போட்டியிட்டால் அவர்களுக்கும் இம்மாதிரிதான் கலாசாரச் சிக்கல்கள் வரும். ஆனால் அவர்களுக்கு அம்மாதிரியான பைத்தியக்காரத்தனமான ஆசை எல்லாம் கிடையாது. நமக்குதான் ஆஸ்கர் விருது வாங்குவது வாழ்நாள் லட்சியமாக உள்ளது. காரணம், தாழ்வு மனப்பான்மை தான்.

  சிவாஜி நடிப்புலக இமயம். ஆனால் அவரையே "தென்னாட்டு மார்லன் பிரண்டோ" என எழுதிக் கேவலப்படுத்துகிறோம். கோயமுத்தூரைத் "தென்னாட்டு மான்செஸ்டர்" என எழுதுகிறோம். ஊட்டியை "ஏழைகளின் ஸ்விட்சர்லாந்து"... இப்படி நம் நாட்டின் விலைமதிப்பற்ற செல்வங்களை வெளிநாட்டு பொருள்கள்/ஆள்களுடன் ஒப்பிட்டு, "தென்னாட்டு, தமிழக" எனப் பாராட்டும் அவலத்தை என்னவென்பது?அமெரிக்காவில் மார்லன் பிரான்டோவை "அமெரிக்க சிவாஜி" என யாரும் அழைப்பது கிடையாது. ஆல்ப்ஸை "ஐரோப்பாவின் இமயம்" என அவர்கள் அழைப்பது கிடையாது..

  இம்மாதிரியான ஆபாசப் பட்டங்களை கொடுத்து நம் கலைஞர்கள், ஊர்களைக் கேவலப்படுத்துவதை நிறுத்தவேண்டும். வெளிநாட்டு விருதுகளுக்கு அடித்துகொள்வதையும் நிறுத்தவேண்டும். தமிழக நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம் ஒன்று சேர்ந்து பாரதிராஜா, பாலா, பாக்கியராஜ், கலைஞானம் மாதிரி கலைஞர்களை வைத்து விருது கமிட்டி ஒன்றை அமைத்து ஒவ்வொரு ஆண்டும் தமிழில் வெளிவந்த படங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி ஒரு கோடி ரூபாய் பரிசும் கொடுக்கலாம். வெளிநாட்டான் காலில் விழுந்து விருது கொடு எனப் பாத பூஜை செய்வதும் அரசியல்வாதிகள் காலில் விழுந்து சிபாரிசு கடிதம் கேட்பதும் அசிங்கத்திலும் அசிங்கம்.

  தமிழ்த் திரையுலகம் மாதிரி இன்னொரு திரையுலகம்தான் ஆங்கிலத் திரையுலகம். அந்தச் சுயமரியாதை கொஞ்சமாவது இருந்தால் தமிழ்த் திரைத்துறை முதுகெலும்பை வளர்த்துக்கொண்டு சொந்தக்காலில் நிற்கவேண்டும். செய்வார்களா என்று எழுதியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai