அமிதாப் பச்சனின் குடும்பத்தினருடன் சோனியா ஏன் தங்கினார்?

அமிதாப் பச்சனுக்கு வயது என்பது ஒரு எண் மட்டுமே.
அமிதாப் பச்சனின் குடும்பத்தினருடன் சோனியா ஏன் தங்கினார்?

அமிதாப் பச்சனுக்கு வயது என்பது ஒரு எண் மட்டுமே. சிலருக்கு மட்டுமே இந்த வரப்பிரசாதம் வாய்க்கும். தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குரியவரான இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த கலைஞரான அமிதாப் பச்சனுக்கு இன்று பிறந்த நாள். தனக்கு ஒரு வயது அதிகரிக்கும் இந்த நாளில், தான் ஆரோக்கியமாகவும் தெளிவாகவும் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார். 'அமிதாப் பச்சன் ஒரு 77 வயது இளைஞன், 24 வயது இளைஞனின் மனதுடன் இருக்கிறார்’ என்று அபிதாப் பற்றி பாலிவுட் இளம் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா கூறியது அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. பாலிவுட்டின் இளம் நடிகர்களுக்கு இந்த வயதில் கூட சவாலாக இருக்கிறார் அபிதாப் என்றால் மிகையில்லை.

'பா', 'பிளாக்', '102 நாட் அவுட்', ‘சாய் ரா நரசிம்ம ரெட்டி’ போன்ற படங்களில் அவர் தனது உண்மையான வயது அல்லாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த பாத்திரங்களுக்காக அவர் மிகக் கனமான புரோஸ்தெடிக்ஸ் மேக் அப் மூலம் முற்றிலும் தனது தோற்றத்தை மாற்றியிருக்கிறார். இது கடந்த காலங்களில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே செய்திருக்கிறார்கள். ‘விருத்’ என்ற படத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார், மேலும் ‘பிரம்மாஸ்திரத்தில்’ சில ஸ்டண்ட் காட்சிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இப்படி பல சாகஸங்களுக்குச் சொந்தக்காரராக அன்றும் இன்றும் இருக்கிறார் பிக் பி.

அமிதாப் பச்சன் புதிய படங்களில் கையெழுத்திடுவதில் மூலம் இளம் நடிகர்களுக்கு போட்டியாக மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டாகும் படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறார். அண்மையில் வெளியான அவரது 'பத்லா' திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி மற்ற நடிகர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்தது. வயது ஒரு நம்பர் மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் தன்னிகரற்ற நடிப்பாற்றலால் நிரூபித்து வருகிறார் பிக் பி.

இன்றைய பிரயாக்ராஜ்  என்று அழைக்கப்படும் அன்றைய அலாகாபாத் நகரில், 1942-ஆம்  ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி பிறந்த அமிதாப் பச்சனுக்கு திரையுலகில் முகம் காட்டுவதற்கு முன்பாகவே முகவரி இருந்தது. பிரபல ஹிந்தி கவிஞரும், இலக்கியவாதியுமான ஹரிவன்ஷ்ராய் பச்சனின் மகன் என்பதுதான் அது. இடதுசாரி சிந்தனைக் கவிஞரான ஹரிவன்ஷ்ராய் பச்சன், தனது மகனுக்கு சூட்டிய பெயர் இன்குலாப் ஸ்ரீவாஸ்தவா என்பது. நவீன கவிதை, இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஹரிவன்ஷ்ராய் பச்சன் மட்டுமல்ல, அவரது மனைவி தேஜி பச்சனும் அரசியல், சமூக வட்டாரங்களில் குறிப்பிடத்தக்கவராக வலம்  வந்தவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மிக நெருங்கிய தோழிகளில் ஒருவர். 

தனது மகன் ராஜீவ் இத்தாலியப் பெண்ணான அன்டோனியா மைனோ என்பவரைக் காதலிக்கிறார் என்பது தெரிந்ததும், அவருக்கு இந்தியப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி விரும்பினார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது தனது தோழி தேஜி பச்சனைத்தான். 

இந்திராவின் மருமகளாகப் போகும் இத்தாலியப் பெண்ணான அன்டோனியா மைனோவுக்கு சோனியா என்கிற இந்தியப் பெயரை தேர்ந்தெடுத்துக் கொடுத்தது பச்சன் தம்பதியர்தான். திருமணத்திற்கு முன்னால் சுமார் ஆறு மாத காலம் பச்சன் குடும்பத்தில் இந்தியக் கலாசாரத்தைக் கற்றுக்கொள்வதற்காக சோனியா தங்க வைக்கப்பட்டார். ராஜீவ் - சோனியா திருமணத்திற்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்தவர், இப்போது "தாதாசாகேப் பால்கே' விருது பெறும் 76 வயது அமிதாப் பச்சன்.

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்று கொண்டாடப்படும் மிருணாள்  சென்னின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர் அமிதாப். 1969-இல் வெளிவந்த அவரது "புவன் ஷோம்' திரைப்படத்தில் பின்னணி குரல் வழங்குவதன் மூலம்தான் திரையுலகுடனான இன்குலாப் ஸ்ரீவாஸ்தவாவின் தொடர்பு ஏற்பட்டது. அதே ஆண்டில் கே.ஏ. அப்பாஸ் தயாரித்த "சாத் ஹிந்துஸ்தானி' என்கிற திரைப்படம்தான் அவரை அமிதாப் பச்சனாகத் திரையில் அறிமுகப்படுத்தியது. "இந்த உயரமான இளைஞனுக்கு இணையான கதாநாயகி நமது திரைப்படத்தில் இல்லையே' என்று தான் யோசித்ததாக கே.ஏ. அப்பாஸ் பதிவு செய்திருக்கிறார். ஆனால், உயரம் அமிதாபுக்குத் தடையாக இருக்கவில்லை. மாறாக, எல்லோரையும் அதிவிரைவாகத் தாண்டி முன்வரிசையில் தன்னை நிலைநாட்டிக் கொள்ள உதவியாக இருந்தது.

பிறந்த நாள் வாழ்த்துகள் அபிதாப் ஜி!

இதையும் படிக்கலாம் தினமணி தலையங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com