விஜய் உதறித் தள்ளி மெகா ஹிட்டான 12 படங்கள்!

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகத்தில் தமிழர்கள் வாழும் இடத்தில் எல்லாம் நடிகர் விஜய்க்கு நிறைய ரசிகர்கள் உண்டு.
vijay
vijay

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகத்தில் தமிழர்கள் வாழும் இடத்தில் எல்லாம் நடிகர் விஜய்க்கு நிறைய ரசிகர்கள் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு நடிகர் என்றால் அது விஜய்தான். இன்று வெளியான பிகில் படத்தை ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் விஜய் நடிக்கவிருந்து ஆனால் கைவிட்ட படங்கள் என்ன என்ன என்ற பட்டியலைப் பார்க்கலாம்.

1. 1999-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் விஜய்யிடம் சொன்ன கதைதான் முதல்வன். ஆனால் விஜய் அந்தப் படத்தில் நடிக்க மறுத்ததால் ஷங்கர் அர்ஜுனை நடிக்க வைத்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பின் 2012-ம் ஆண்டில் தான் மறுபடியும் ஷங்கர் விஜய் கூட்டணி நண்பன் படத்தின் மூலம் இணைந்தது. இந்தப்  படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற்றது.

2. 2001 ஏ.ஆர். முருகதாஸ் தனது முதல் படமான 'தீனா’வில் நடிக்க முதல் முதலி விஜயைத்தான் அணுகியிருக்கிறார். புதுமுக இயக்குநர் என்பதால் விஜய் தயங்கி, படத்தை மறுத்தார் விஜய். பின்னர் இந்தப் படத்தில் அஜித் நடித்தார். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் முதல் படத்திலேயே கவனம் பெற்ற இயக்குனராகிவிட்டார்.

3. 2003-ம் ஆண்டில் விஜய் தவற விட்ட படம் தூள். தரணி இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் மெகா ஹிட்டாகி விக்ரமின் ஹிட் லிஸ்ட் பட பட்டியலில் நீங்கா இடம்
பெற்றுள்ளது.

4. 2004-ம் ஆண்டு இயக்குனர் சேரன் தனது ஆட்டோகிராஃப் கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறார். கால்ஷீட் பிரச்னைகளால் விஜயால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதனால் சேரன் கதாநாயகனாக நடிக்க முடிவெடுத்து களத்தில் இறங்கினார். அந்நாட்களில் அவரை பேட்டி எடுத்தவர்களிடம் பெயரைச் சொல்லாமல் உச்ச நட்சத்திரம் ஒருவரிடம் கதை சொன்னேன், ஆனால் அவர் மறுத்ததால் நானே நடிக்க வேண்டியதாகிவிட்டது. கடைசியில் என்னையும் நடிகனாக்கிவிட்டது கோலிவுட் என்று கூறியிருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்தப் ப்டம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

5. 2006-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டைக்கோழி படத்தில் நடிக்க விஜய்தான் பொறுத்தமாக இருப்பார் என்று முடிவு செய்த இயக்குனரை நம்பிக்கை பொய் ஆனதால், விஷாலை வைத்து படத்தை வெற்றிகரமாக முடித்தார் லிங்குசாமி.

6. 2010-ம் ஆண்டு - ஹரி இயக்கத்தில் சிங்கம் படம் விஜய்யிடம் வந்தது. இப்போதைக்கு போலீஸ் ஸ்டோரி வேண்டாம் என்று விஜய் நினைத்ததால், அந்தப் படத்தில் சூர்யா நடித்தார். படம் சூப்பர் ஹிட்டாகி சிங்கம் மூன்றாம் பாகம் வரை வந்துள்ளது.

7. 2011-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சண்டைகோழி ட்ராப் ஆனதால் மீண்டும் இருவரும் ஒரு படத்தில் இணையலாம் என்று திட்டமிட்டனர். வேட்டை படம் இப்படித்தான் உருவானது. ஆனால் என்ன காரணத்தினாலோ விஜய் அந்தப் படத்திலிருந்து விலகிவிடவே ஆர்யா நடித்தார். படம் ஓரளவுக்கு சுமாராக ஓடியது.

8. 2013-ம் ஆண்டு விஜய் கைவிட்ட இன்னொரு முக்கியமான படம் புலி. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த படம் இது. எஸ். ஜே. சூர்யாவின் கனவுப் படம் இது. விஜய் எஸ்.ஜே.சூர்யா இணைந்த சூப்பர் ஹிட் படமான குஷி (2000)-ஐத் தொடர்ந்து விஜய்யுடன் இயக்குனரின் இரண்டாவது திரைப்படமாகத்தான் புலி படத்தை எடுக்கத் திட்டமிருந்தார்கள். அந்த சமயத்தில்தான் விஜய் சில பார்முலா படங்களிலும் வணிகரீதியான பொழுதுபோக்கு படங்களிலும் நடித்து உச்ச நட்சத்திர அந்தஸ்த்துக்கு உயர்ந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் புலி பட ஸ்கிரிப்ட் அவர் உருவாக்க முயற்சித்த இடத்துக்குப் பொருந்தவில்லை. ஆகவே படம் கைவிடப்பட்டது, ஆனால் பின்னர் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் புத்துயிர் பெற்றது. பின்னர் விஜய் 2015-ம் ஆண்டில் இதே தலைப்புடன் இயக்குனர் சிம்பு தேவன்

9. 2002-ல விக்ரமன் இயக்கத்தில் விஜய் தான் முதலில் உன்னை நினைத்து படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் விக்ரமன் மற்றும் விஜய்க்கு மட்டுமே தெரிந்த காரணத்தால் இந்தப் படத்தில் விஜய் நடிக்கவில்லை. பின்னர் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது இந்தப் படம்.

10. 2013-ம் ஆண்டில் தொடர்ந்து மாஸ் மசாலா படங்களில்  நடித்து வந்த விஜய்க்காக வெங்கட் பிரபு ஒரு அரசியல் கதையை உருவாக்கினார். அதுதான் பிரியாணி. இந்தக் கதையை முதன் முதலில் விஜய்க்காகத்தான் எழுதினார் வெங்கட் பிரபு. ஆனால் விஜய் நடிக்காத காரணத்தால் கதையை முற்றிலும் மாற்றி கார்த்தியை நடிக்க வைத்தார். படம் நல்ல கவனம் பெற்றது.

11. 2013-ம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் யோஹன்: அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் விஜய் நடிக்கவிருந்தார். இந்தப் படத்துக்கு பூஜை போடப்பட்டு, படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. டத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போவதாகக் கூட அறிவித்தனர். ஆனால் ஷூட்டிங் தொடங்காமலேயே இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்த படம் சிஐஏ-வில் பணிபுரியும் ஒரு அமெரிக்க வாழ் இந்தியரைச் சுற்றி பின்னப்பட்டது. மூன்றாம் தலைமுறை என்.ஆர்.ஐ. அமெரிக்க செனட்டராக இருக்கும் அவரது தந்தை, அமெரிக்க மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆபத்தைக் கண்டுபிடிக்க மகனை இந்தியாவுக்கு அனுப்புகிறார். சுற்றி நடக்கும் க்ரைம் விஷயங்களை புலனாய்வு செய்யும் ஒரு ஸ்பை திரில்லராக இப்படத்தை உருவாக்க கெளதம் வாசுதேவ் மேனன் திட்டமிருந்தார். இந்தப் படத்துக்குப் பின் அடுத்தடுத்து இதன் தொடர்ச்சிகளை உருவாக்கும் திட்டங்களையும் கொண்டிருந்தார். ஒவ்வொன்றும் வெவ்வேறு நகரத்தில் வெவ்வேறு மர்மத்தைச் சுற்றி நடக்கும் கதைகளாக அமைத்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக இந்த படம் தனது மற்ற படங்களை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும், தனது  ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று விஜய் உணர்ந்தார். கடைசி நேரத்தில் படம் தனது இமேஜிக்கு பொருந்தாது என்று கூறி கைவிட்டார் விஜய். எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், தனது கனவுப் படமான யோஹன்: அத்யாயம் ஒன்று படத்தை மீண்டும் இயக்கவிருக்கிறார் கெளதம் மேனன். இதில் வருண் ஹீரோவாக நடிக்கிறார். கோலிவுட்டில் துணை நடிகராக இருந்த வருண் அண்மையில் வெளியான பப்பி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வேல்ஸ் நிறுவனத்துக்காக கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இந்தப் படத்துக்கு யோஹன்: அத்தியாயம் ஒன்று என்ற பழைய படப் பெயரே சூட்டப்படுமா அல்லது புதிய பெயர் சூட்டப்படுமா என்று தெரியவில்லை. ஆனால் விஜய் இந்தப் படத்தை கைவிட்ட பின் கெளதம் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் கதையை தூசி தட்டி எடுத்திருப்பதால் கிடப்பில் இருந்த படம் புத்துயிர் பெற்றுள்ளது.

12. 2019-ம் ஆண்டில் இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் நடிக்க இருந்தார். விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து படத்தைத் தொடங்க முயற்சித்தார் இயக்குனர். ஆனால் விஜய் இரண்டு ஆண்டுகள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது விக்ரம், சிம்பு மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com