'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் தாமதத்துக்கு நான்தான் காரணம்!

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் செப்டம்பர் 6 வெளியாக இருந்தது.
'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் தாமதத்துக்கு நான்தான் காரணம்!

சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் செப்டம்பர் 6 வெளியாக இருந்தது. ஆனால் சில பிரச்னைகள் காரணமாக இரண்டொரு நாட்களில் வெளியிடப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனது திரை வாழ்க்கை குறித்தும், முந்தைய படங்கள் பற்றியும், இந்தப் படத்தின் தாமதத்துக்கான காரணங்களையும் இந்த நேர்காணலில் மனம் திறந்து பகிர்ந்துள்ளார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். 

எனை நோக்கி பாயும் தோட்டா வெளிவரும் சமயத்தில் உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?  படம் ரிலீஸ் தாமதங்களுக்கான காரணம் என்ன?

என் மனநிலை எப்படி இருக்குன்னு உண்மையிலே தெரியலை. இந்தப் படத்தைப் பத்தி நிறைய பேச்சு இருக்கு, எல்லா தரப்பிலும் நல்லவிதமான பேச்சு உள்ளது, இது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். நிறைய பேர் படத்துல வொர்க் பண்ணாங்க.  படப்பிடிப்பே ரொம்ப அபூர்வமாத்தான் சுலபமாக நடக்கும். அந்த வகையில் இந்தப் படத்தைப் பத்தின பேச்சு, இந்தப் படத்தின் இசை, பாடல்கள், விஷுவல்ஸ், தனுஷ் லுக்ஸ், நடிப்பு மேகா லுக்ஸ் பத்தி எல்லாருமே பேசினாங்க. அது சந்தோஷம்

படத்தின் தாமத்துக்கான காரணம், யார் என்ன தப்பு செய்தார்கள் என்பது எல்லாம் இந்த நேர்காணலை படிக்கறவங்களுக்கு ஆர்வம் தரக்கூடிய விஷயமா இருக்காது. புதுசா படம் பண்ண விரும்பறவங்களுக்கும் இது தேவையில்லாத விஷயம். நல்ல விஷயங்கள் மட்டும் தெரிந்து அவர்கள் வந்தால் நல்லா இருக்கும். இந்த கசப்புக்கள் இப்ப தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்லை. பின்னாடி தெரிஞ்சிக்கலாம். ஏன்னா நான் படம் பண்ணும்போது, இந்தக் கதை பிடிச்சுத்தான் ஆரம்பிச்சேன். படப்பிடிப்பு நடந்த அந்த 60-70 நாட்கள் ரசித்துதான் நான் பண்ணினேன். என் எல்லா படத்திலும் அப்படித்தான் இருப்பேன். நான் படம் பண்ணத்தான் பிறந்தேன்னு நினைக்கிறேன். மத்ததது எல்லாம் இயல்பா நடக்கற விஷயம். அது கஷ்டமோ நஷ்டமோ அந்தக் கதையை ரசிச்சு நேசிச்சு செய்யறேன். 

என்னை மறந்துதான் எப்போதும் வேலை செய்கிறேன். நான் செய்யற வேலை எனக்குப் பிடிச்சிருக்கு. என் வேலையை நான் ரொம்பவே நேசிக்கறேன். படங்கள் பண்ணறதுக்கு காரணம் எனக்கு இதுதான் தெரியும், இதான் பிடிக்கும் இந்தப் படமும் அப்படித்தான். எனக்கு பிடிச்சிருக்கு, நிறைய பேருக்கு பிடிச்சிருக்கு. ஆனால் இதுல நான் எதிர்கொண்ட சில விஷயங்களைத்தான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கலை. சினிமால இருக்கற பிஸினெஸ் விக்டிம்ஸ் தான் நாங்க. அதனால நான் சந்திச்ச பிரச்னைகள் அதிகம். இது போன்ற இடைஞ்சல்கள் எல்லாத்துலயும் வரும்... சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் கூட பிரச்னைகள் உண்டு.

ENPT வெளியீட்டில் உங்கள் எதிர்ப்பார்ப்பு என்ன?

படத்தின் தாமதம் குறித்து எரிச்சலடைந்த அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். தாமதத்திற்கு நான்தான் காரணம். ஒருவேளை மக்களுடனான எனது உறவு சிறப்பாக இருந்திருக்கலாம். சில விஷயங்களைப் பற்றி எடுத்துக் கூறி தனுஷை நான் சமாதானப்படுத்தியிருக்கலாம்; ஒருவேளை நான் முதலீட்டாளரை சிறப்பாக கன்வின்ஸ் செய்திருக்கலாம். பணச் சிக்கல்களையும் மீறி கிரியேட்டிவாக இயங்க முடியும் என்று நினைத்தது என் தவறுதான். எனவே, இந்தத் தாமதத்திற்கு நான்தான் காரணம், மன்னிக்கவும். திரையரங்குகளுக்குள் மாயத்தை உருவாக்கும் படங்கள் சில உள்ளன. இந்தப் படத்தில் ஒரு சில தருணங்களில் அது இருக்கும் என்று நம்பகிறேன். தனுஷின் தோற்றம் மற்றும் நடிப்பு, மேகாவின் புத்துணர்ச்சி, இசை, ஒளிப்பதிவு, கதை சொல்லலில் முன்னும் பின்னுமாக இருக்கும் தன்மை… ENPT ஒரு எளிமையான படம், இதில் நாங்கள் உருவாக்கியுள்ள மேஜிக்கை மக்கள் உணர்ந்தால், நான் மகிழ்ச்சி அடைவேன். இல்லையென்றால்… மன்னிக்க வேண்டுகிறேன்.

படத்தைப் பற்றிய தகவல்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கிற போது எப்படி சமாளித்தீர்கள்?

கெட்ட வார்த்தைகளில் திட்டித்தான் அப்டேட்ஸ் கேட்கறாங்க. இது என்னுடைய படம்.. என் மீடியம். நான் சில விஷுவல்களை விடலைன்னா இதைப் பற்றி யாருக்கும் தெரியாது. என்னுடைய கையெழுத்து போட்டு நான்தான் அந்தப் படம் பண்றேன். அதுக்கான பிரச்னைக்கு நான்தான் காரணம். இதை நான்தான் சால்வ் பண்ணனும். அதுக்குன்னு ஒரு டைம் வரும். அந்த நேரத்துல நிச்சயம் படம் வெளிவரும். உங்களுக்காகத் தான் படம் பண்றேன். ஹீரோ ரசிகர்கள் சில சமயம் ப்ரெஷர் தருவாங்க, வேறு விஷயங்களைப் பத்தி பதிவிடும்போது இதை விட்றா..ENPT பத்தி சொல்லு, ஏன் லேட் என்று கேள்வி கேட்கும்போது சங்கடமாதான் இருக்கும்.

சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் எப்படி செயல்படுகிறாங்க? இந்த வாரம் இந்தப் படம்... இந்தப் படம் இப்படி அவர்கள் தேடல், எதிர்ப்பார்ப்பு முடிவில்லாததா இருக்குன்னு நினைக்கறீங்களா?

இது எதுக்குள்ளயும் நான் இல்லை. நான் வரவும் விரும்பலை. எனக்குத் தெரிஞ்சு
இது 10 - 15 பேர் உருவாக்கும் விஷயம் இது. பத்து லட்சம் பேர் இதுக்குள்ள இருக்காங்கங்கற மாதிரி நம்ப வைக்கறாங்க.  வெளியில இருக்கறவங்களை விடுங்க, சினிமால இருக்கறவங்களும் கூட அதை நம்பிடறாங்க

ரொம்ப தப்பா விமர்சனங்கள் எழுதினாலும் அந்த சில படங்களை நிறைய ரசிகர்கள் பார்த்து ரசிச்சிருக்காங்க. வசூல் குவிச்சிருக்கு. நாம எந்த இடத்துல இருக்கோம், அந்த இடத்துல என்ன எனர்ஜி இருக்குங்கறதுதான் முக்கியம். மத்தபடி யாராலேயும் எதையும் பாதிக்க வைக்க முடியாது.  இதுதான் உண்மை.

பொருளாதார பிரச்னைகளில் ஆர்ட் விஷயங்களில் எப்படி கவனம் செய்ய முடியுது?

அது நிச்சயம் முடிகிறது. அந்த zone-குள்ள நான் இல்லைன்னா தைரியமா உங்களோட  பேசக் கூட என்னால் முடியாது. இந்தப் படம் ரிலீஸ் ஆகப் போகுது, எல்லாருக்கும் போய் இந்தப் படம் ரீச் ஆகும்.  ஒரு whim and impulse-லதான் பண்ணது. இது அவார்ட் வாங்கப் போகுது, extraordinary film அப்படின்னு எல்லாம் நினைச்சு பண்ணலை. படம் சிலருக்கு பிடிக்காம கூட இருக்கலாம். அடுத்தடுத்து படம் பண்ணுவேன். எனக்கு இதுதான் தெரியும், வேற எதுவும் தெரியாது.

இந்தப் படத்துல ட்ரெய்லர்ல வாய்ஸ் ஓவர் கேட்டோம். வாய்ஸ் ஓவர்ல கதை சொல்றது உங்களுக்கு பிடிக்கும்னு முந்தைய படங்கலேர்ந்து தெரிஞ்சுக்கலாம். இந்தப் படத்துல அதை எப்படி கையாண்டு இருக்கீங்க? 

பொதுவாகவே எழுத ஆரம்பிக்கும் போது தானாகவே எனக்குள்ள process ஒண்ணு தொடங்கும். அது voice over போலத்தான் எனக்குத் தொடங்கும். சோம்பேறி, வழக்கமா செய்யறதையே செய்யறான்னு மத்தவங்க சொல்லலாம். ஆனா எனக்கு அப்படித்தான் வருது. எனக்கு அது பிடிச்சும் இருக்கு. அவ்வளவுதான்.

என்னுடைய படங்கள் இப்படித்தான் இருக்கணும்னு நான் சொல்லலை. எப்படியோ குரல் வழியாக கதை சொல்லும் முறைக்கு நான் பழக்கப்பட்டுட்டேன். இந்தப் படத்துல அதை இன்னும் அதிகப்படுத்தியிருக்கேன்னு கூட சொல்லலாம். தனுஷ் முதல்ல தேதி இல்லைன்னு சொன்னார். சும்மா படிச்சிப் பாருங்க, பிடிச்சு இருந்தா ஒரு வருஷம் கழிச்சி பாத்துக்கலாம்னு சொல்லித்தான் கதையை அவருக்கு அனுப்பினேன். ஆனால் அவர் உடனே பதில் சொல்லிட்டார். காரணம் கதை அவருக்கு அந்தளவுக்கு பிடிச்சிருச்சு. அதுக்கு முக்கிய காரணம் அந்த வாய்ஸ் ஓவர் அவரை கவர்ந்திருச்சு. அவரோட அந்த yes தான் இந்தப் படம் நடக்க காரணம். எப்ப ஷூட் போகலாம்னு கேட்டார்.  வழக்கமாக இல்லாம இதுல கொஞ்சம் சின்னதா புதுசா ஒண்ணு செஞ்சிருப்பேன். இது என்னோட ஸ்டைல்ல இருக்கிற படம்தான். ரொம்ப சிம்பிள்ளான விஷயம், சிம்பிள் இமோஷன்ஸ், சிம்பிள் elements பல இருக்கு. பட டைட்டில் என்னோட லைஃப்க்கு ஒரு metaphorதான். தோட்டா வந்திட்டே இருக்கு. கொஞ்ச நாள் கழிச்சு தோட்டா என்கிட்டேர்ந்து போகும்னு நினைக்கறேன். 

இந்தக் கதை ஒரு நடிகைக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கும் உள்ள ஒரு காதல் கதைன்னு சொல்லலாமா?

சொல்லலாம். புதுமுகமா ஒருசில படங்கள்ல நடிச்சிட்டு இருக்கும் ஒரு நடிகைதான் கதை நாயகி. ஒரு சூழல்ல சிக்கறாங்க அதைப் பற்றின கதை. இந்தப் படத்துல ரொமான்ஸ் புதுசா இருக்கும். 

உங்க குரல் வாய்ஸ் ஓவர் ஒரு ட்ரெண்ட் உருவாக்கியிருக்கு. வேறு இயக்குநர்கள் உங்களை அணுகும் போது எப்படி உணர்வீர்கள்?

இது கொஞ்சம் சங்கடமான விஷயம், மேலும் நான் எதிர்ப்பார்க்காத விஷயம். சிலர் ஃபோன் பண்ணி ஒரு narration இருக்கு, படத்தோட opening-ங்கல voice over தர முடியுமான்னு கேட்பார்கள். சிலருக்கு செஞ்சு தந்திருக்கேன். ஆனா சில இசை அமைப்பாளர்கள் பாடச் சொல்லி கேட்பாங்க,  நண்பர்கள் நடுவில் நல்லா பாடக் கூடியவன்தான், ஆனால் சினிமால மறுத்துடுவேன். 

உங்க படங்கள்ல வர கதாநாயகிகளின் பெயர்கள் லேகா, ஹேமானிகா, மாயா, ரீனா, ஜெஸ்ஸி, லீலா - இப்படி ரொம்பவே அழகானவை. இந்தப் பெயர்கள் தேடல் எப்படி நேர்ந்தது? ஒருவிதமான பெண்களுக்கு வைக்கக் கூடிய பெயர்கள்தான் நான் பாக்கறேன்.

இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்கறது இல்லை. சில பேர் எனக்குத் தெரிந்தவர்கள்தான். ஆனா இது ஒரு flow-ல வரும். படத்தோட டைட்டிலும் அப்படித்தான். இந்தப் படத்தின் டைட்டில் முதல் காட்சியின் பதினஞ்சு நிமிஷம் எழுதின போது ஒரு மின்னல் மாதிரி தோணுச்சு, the bullet that is coming at me அப்படின்னு வந்துச்சு, அதுவும் hero வாய்ஸ் ஓவர்ல வர மாதிரி வந்தது. உடனே கார்க்கிக்கு ஃபோன் செய்தேன். தோட்டா அப்படிங்கற வார்த்தை பயன்படுத்தி இந்த அர்த்தத்துல வாக்கியம் சொல்ல முடியுமான்னு கேட்டேன். எனை நோக்கி பாயும் தோட்டா நல்லா இருக்கும்னு சொன்னார். உடனே ரெஜிஸ்டர் பண்ணினோம்.

எப்பவும் பெயர்கள் என்னை ரொம்ப கவர்ந்துவிடும். குழந்தைகளைப் பார்க்கும் போது அவங்க பேர் என்னன்னு கேட்பேன்..அது அப்படியே மனசுல பதிஞ்சிடும். தேவைப்படறப்ப நினைவுக்கு வரும். 

என் படங்கள்ல காண்பிக்கப்படும் பெண்கள் ஓரளவுக்கு  எலைட் பெண்கள்தான். ஒரே ரகத்தை சேர்ந்த பெண்கள்தான் இவங்க எல்லாரும். நான் பெரிசா அதுலேர்ந்து deviate ஆனது இல்லை. நிறைய விமரிசனத்தை இதனால் எதிர்கொண்டேன். This is what I know. This is inspiriing அப்படின்னு காலேஜ் பெண்கள் நிறைய பாராட்டியிருக்காங்க. அவங்களுக்கு அது பிடிக்குது. திரைல நீங்க பெண்களை காட்டற விதம் பிடிக்குது என்று பாராட்டியிருக்காங்க. மேலும் அவங்க elegant-ஆ இருக்காங்க. உறுதியான சுயம் சார்ந்த பெண்களாகவும் இருக்காங்க.  நாமும் இப்படி இருக்கலாமே என்று ஒரு பத்து வயது பெண் நினைத்தால் அது சின்ன சந்தோஷம் தரும்.

விமரிசனங்களை தாண்டி பெண் கதாபாத்திரங்களை நல்லா எழுதறீங்கன்னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க. இன்னும் வேற சில பரிமாணங்கள்ல இருக்கலாமே, அதுக்கு முதல்ல ஒரு பெண்ணா இருந்து பாருங்கன்னு சிலர் என்கிட்ட சவால் விட்டிருக்காங்க.  உங்க பெண் கதாபாத்திரத்தை  நாங்க எழுதறோம்னு கூட சொல்லியிருக்காங்க. ஒரு content-ஐ உருவாக்கறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும். நல்ல contents கிடைச்சா நிச்சயம் பண்ணுவேன்.

(ஆங்கில நேர்காணல் - சுதிர் ஸ்ரீநிவாஸன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com