பெண்களின் உண்மையான சுதந்திரம் எது?

பெண்கள் நாட்டின் கண்கள் என்று கூறுவார்கள்.
பெண்களின் உண்மையான சுதந்திரம் எது?


பெண்கள் நாட்டின் கண்கள் என்று கூறுவார்கள்.  ஒரு தேசத்தை பிற நாட்டினர் மதிப்பதற்கு அளவுகோலாக அந்த நாட்டில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு  இருக்கிறது என்பதும் அடங்கியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இன்று நேற்று தொடங்கியதில்லை. காலம்காலமாக அரங்கேறி வரும் மோசமான ஒன்றுதான் பாலியல் வன்கொடுமைகள். இன்றைய காலத்தில் தகவல்தொடர்பு சாதனங்களின் அசுர வளர்ச்சியால் நாட்டின் எந்த மூலையிலும் நடக்கும் எந்தவொரு செய்தியும் உடனடியாக கிடைக்கப் பெறுகிறது.

அந்த வகையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு அதிக கவனத்தைப் பெறுகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும் ஆண்களும் மனதளவில் மாற வேண்டியது கட்டாயமாகும்.

இந்த அஞ்சா நெறி குறும்படம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் எடுத்த முடிவு குறித்து பேசுகிறது. பெயர்த்திக்கு தாத்தா கதை சொல்வது போல் படம் தொடங்குகிறது. பணியை முடித்து விட்டு வீடு திரும்ப தனியாக இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பெண், சில காமுகர்களால் பாதிக்கப்படும்போது, அவள் எடுக்கும் முடிவு குறித்து தாத்தா கதையாக சொல்கிறார். அந்தக் கதையில், பெண் மான் என்றும், ஆண்கள் நரிகள் என்றும் கதையை மாற்றி சொல்கிறார்.

படத்தின் முடிவு யாரும் எதிர்பாராத திருப்பம். இந்தக் கதையே அந்தச் சிறுமியின் தாயைப் பற்றியதுதான் என்பது தெரியவரும்போது ஆச்சிரயம் எழுகிறது.

நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சுபாஷ், கமலேஷின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையான காட்சிகளை அளித்திருக்கிறது. பவகணேஷின் இசையும் அருமை.

படத்தின் முடிவில், "ஆணின் பலம் பெண்களை காக்க" என்ற நிலை வரும்போதுதான் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்ற அவசியமான வாய்ஸ் ஓவருடன் படம் முடிவடைகிறது.

ஹரி
ஹரி

மிக சிக்கலான கதையை அழகாக படம்பிடித்ததுடன் படத்தொகுப்பும் செய்த இயக்குநர் ஹரி கூறியதாவது:

'கோவையைச் சேர்ந்த நான் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்து முடித்து தற்போது பணிபுரிந்து வருகிறேன். கிரிக்கெட்டிலும், கூடைப்பந்திலும் ஆர்வம் அதிகம். கல்லூரி காலத்தில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது பிடிக்கும். ஒரு கட்டத்தில் சோப்பு டப்பா என்ற பெயரில் நண்பர்களுடன் சேர்ந்து யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கினோம். முதன்முதலாக பஞ்சபூதம் என்ற மியூஸிக்கல் குறும்படத்தை உருவாக்கினோம்.  இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக அஞ்சா நெறி கதையை எழுதினேன். சில குறும்பட விழாக்களில் விருதுகளை இந்தப் படம் வென்றுள்ளது. 

யூ-டியூப் சேனல் ஒன்றில் இந்த படம் ஒளிபரப்ப தேர்வானது. அதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அஞ்சா நெறியை உருவாக்க உதவியை அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து நல்ல கதைகளை திரைப்படங்களாக உருவாக்க வேண்டும் என்பது எனது லட்சியம்' என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்த ஹரிக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com