கவின் - லாஸ்லியா காதலை எதிர்ப்பது ஏன்?: இயக்குநர் வசந்த பாலன் கேள்வி!

முக்கியமாக சேரப்பா இந்தக் காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்தார்...
கவின் - லாஸ்லியா காதலை எதிர்ப்பது ஏன்?: இயக்குநர் வசந்த பாலன் கேள்வி!

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று வரும் நடிகர் கவின், இலங்கையைச் சேர்ந்த சின்னத்திரைத் தொகுப்பாளர் லாஸ்லியா ஆகிய இருவருடைய நட்பும் தற்போது காதலாக மலர்ந்துள்ளது. இதற்கு அந்நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான இயக்குநர் சேரன் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் போட்டியிலிருந்து லாஸ்லியாவின் கவனம் சிதறும் என்பது அவருடைய விளக்கமாக உள்ளது. இந்த வாரம் லாஸ்லியாவை பிக் பாஸ் அரங்கில் காண வந்த அவருடைய குடும்பத்தினரும் காதலுக்கு எதிராகப் பேசியுள்ளார்கள். இதையடுத்து இயக்குநர் வசந்த பாலன், ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளதாவது:

கேரளா பிக்பாஸ் சீசன் 1 தொடரில் சின்னத்திரை தொகுப்பாளினி பியர்ல் மானே மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த் கலந்துகொண்டு அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி அதை கொண்டாடினார்கள். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய,கொண்டாடிய தருணங்களை பார்கையில், எந்தத் திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காதல். பார்க்க பார்க்க தித்திக்கும் காதல். பார்க்காதவர்கள் கீழே உள்ள சுட்டியை கிளிக்கவும்.  

ஆனால் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக லாஸ்லியா, கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே ‘லாஸ்லியா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க, கேமை கவனித்து விளையாடுங்க’ என்ற அறிவுரைகள் நாலாபக்கமிருந்தும் வந்தவண்ணம் இருந்தது. முக்கியமாக சேரப்பா இந்தக் காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்தார்.

இன்று அவர்களுடைய குடும்பம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தபோது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.

‘வழக்கமா என் பொண்ணு இப்படியில்லை! ஏன் இப்படி மாறுனே?’ என்று லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கேட்டவண்ணம் இருந்தார்கள். லாஸ்லியா செய்வதறியாது தவித்தாள். ‘எப்படி போனே? அப்படியே திரும்பி எங்கிட்ட என் மகளா வரணும்' என்று அந்த அம்மா கூறினார்கள்.

லாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார்.

ஆனந்த யாழை மீட்டியவண்ணம் நா.முத்துக்குமார் எங்கிருந்தாலும் கவிதைவரிகளில் வாழ்ந்தவண்ணம் இருக்கிறான். சியர்ஸ்....

அவரும் மகளின் காதலை விரும்பவில்லை.

உன்னோட மகளுடைய கல்யாணத்துக்கா போற என்று சுற்றத்தார் தன்னைக் கேலி பேசினார்கள் என்று வலி மிகுந்த வார்த்தைகளை கூறினார். ‘என்ன மகளே! கையில வேர்க்கிது?' என்று கேட்க ‘சின்ன வயசுல இருந்து அப்படி தான்பா உள்ளங்கைல வேர்க்கும்’ என்றாள் லாஸ். அம்மாவும் ஆமோதித்தார்கள்.

ஆக தமிழகத்தில் இன்னும் அனைவர் மத்தியிலும் காதலுக்கு எதிர்ப்பு என்பது இன்னும் வலுவாகத்தான் உள்ளது. பிக்பாஸ் என்ன செய்ய?

அனைவரும் கேம் விளையாடுங்க! இது கேம்! இது கேம்! என்று அறிவுறுத்தியவண்ணம் இருக்கிறார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை, உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம்.

இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும்.

வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே?

காதலே காதலே என்ற 96 திரைப்படத்தின் பாடல்தான் மனதில் ஒலிக்கிறது என்று எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com