சுடச்சுட

  

  தமிழில் இப்படியொரு வரவேற்பு சாத்தியமா?: ரூ. 200 கோடி வசூலை எட்டியுள்ள ‘மிஷன் மங்கள்’ படம்!

  By எழில்  |   Published on : 13th September 2019 11:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mission_mangal1xx

   

  உலக நாடுகளின் கிரகக் குடியேற்றத்தின் இலக்காகத் திகழ்ந்துவரும் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலனை அனுப்புவதற்காக "மங்கள்யான்' என்ற கனவுத் திட்டத்தை இஸ்ரோ வடிவமைத்தது. உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மங்கள்யான் விண்கலம், 2013-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட்டது. மங்கள்யான் விண்கலத்தின் வெற்றியின் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு விண்கலம் அனுப்பிய ஐரோப்பிய, அமெரிக்க, ரஷிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்து, உலகளவில் புதிய வரலாறு படைத்தது. மேலும், உலக அளவில் முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தை அடைந்த ஒரே நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆசிய அளவில் இந்த முயற்சியில் வென்ற முதல் நாடும் இந்தியாதான். 13.4 கிலோ எடை கொண்ட மங்கள்யான் ஆய்வு விண்கலம், விண்ணில் செலுத்தப்பட்டு 298 நாள்கள் கடந்த பிறகு, 2014-ஆம் ஆண்டு செப்.24-ஆம் தேதி செவ்வாய்கிரக வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, உலக வரலாற்றில் இந்தியா மீண்டும் சாதனை படைத்தது. மங்கள்யான், ஒரு விண்கலம் மட்டுமல்ல, அது இந்தியர்களின் அறிவியல் ஆளுமையின் உச்சம் என்பதை உலகிற்கு பறைசாற்றியுள்ளது.

  இந்தக் கனவுத் திட்டத்தை முன்வைத்து மிஷன் மங்கள் என்றொரு ஹிந்திப் படம் உருவாகி, சமீபத்தில் வெளியானது. அக்‌ஷய் குமார், வித்யா பாலன், தாப்சி, நித்யா மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள். பால்கியிடம் பணியாற்றிய ஜெகன் சக்தி இப்படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு - ரவி வர்மன்.

  ஆகஸ்ட் 15 அன்று வெளியான இப்படம் ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டியது. இந்தியாவில் அக்‌ஷய் குமார் நடித்து விரைவாக ரூ. 100 கோடியை எட்டிய படம் என்கிற பெருமையை எட்டியது. 

  இந்நிலையில் இந்தப் படத்தின் இந்திய வசூல் தற்போது ரூ. 200 கோடியை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் இந்த வசூல் சாத்தியமாகியுள்ளது. இதன்மூலம் அக்‌ஷய் குமார் நடித்த படம் ஒன்று முதல்முறையாக ரூ. 200 கோடி வசூலைக் கண்டுள்ளது. இந்தப் படம் இந்தியாவில் முதல் வாரத்தில் ரூ. 128 கோடியும் 2-வது வாரம் ரூ. 50 கோடியும் 3-வது வாரம் ரூ. 15 கோடியும் 4-வது வாரம் ரூ. 7 கோடியும் வசூலித்துள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான ஹிந்திப் படங்களில் கபிர் சிங், பாரத், உரி ஆகிய படங்கள் இந்தியாவில் ரூ. 200 கோடி வசூலித்த நிலையில் அந்தப் பட்டியலில் 4-வது படமாக இணைந்துள்ளது மிஷன் மங்கள்.

  வித்தியாசமான கதையமைப்புடன் உருவான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளார்கள். அறிவியல் பின்னணியைக் கொண்ட படமாக இருந்தாலும் அக்‌ஷய் குமார் போன்ற ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கு அதிகபட்ச வசூலைத் தந்த படமாக உள்ளது மிஷன் மங்கள். இந்தப் படத்தை இயக்கியவர், ஜெகன் சக்தி என்கிற தமிழர். தமிழில் இதுபோன்ற கதைகளும் இப்படிப்பட்ட வரவேற்பும் சாத்தியமா?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai