நீண்ட இடைவெளிக்குப் பிறகு வசூலில் மீண்டும் அசத்துவாரா சிவகார்த்திகேயன்?

தன்னுடைய மார்க்கெட்டை, அந்தஸ்த்தை மீண்டும் நிரூபிக்கவேண்டிய நிலைமையில் உள்ளார் சிவகார்த்திகேயன்...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வசூலில் மீண்டும் அசத்துவாரா சிவகார்த்திகேயன்?

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, சமுத்திரக்கனி, நடராஜன், ஆர்கே சுரேஷ் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி ரூபன். இசை - இமான். படப்பிடிப்பு மே 8 அன்று தொடங்கியது. நாளை வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படம் டிசம்பர் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வரும் அறிவியல் தொடர்பான படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், பானுபிரியா, யோகி பாபு போன்றோரும் நடிக்கிறார்கள். 24 ஏஎம் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜூலை 7 அன்று தொடங்கியது.  இதன்பிறகு இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், நெல்சன் (கோலமாவு கோகிலா) ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். விக்னேஷ் சிவன் இயக்குவது சிவகார்த்திகேயனின் 17-வது படம். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா இப்படத்தைத் தயாரிக்கிறது. இசை - அனிருத். 

நம்ம வீட்டுப் பிள்ளை படம் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கைக்கு எந்தளவுக்கு முக்கியமாக அமைகிறது?

தற்போதைய நிலையில் தன்னுடைய மார்க்கெட்டை, அந்தஸ்த்தை மீண்டும் நிரூபிக்கவேண்டிய நிலைமையில் உள்ளார் சிவகார்த்திகேயன். அவருடைய சமீபத்திய படங்களான வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகியவை வசூலில் எவ்வித ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தவில்லை. கடைசி இரு படங்களான சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகியவற்றைப் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பவில்லை. இந்த விதத்தில் இவ்விரு படங்களும் சிவகார்த்திகேயனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன என்றுதான் கூறமுடியும். 2016-ல் வெளியான ரஜினி முருகன், ரெமோ ஆகிய இரு படங்களையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். இதனால் வசூலிலும் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் கடைசி மூன்று படங்கள் சிவகார்த்திகேயனையும் ரசிகர்களையும் ஏமாற்றிவிட்டன. 

தற்போதைய சூழலில், கடந்த வருடம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்திய கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜை மலை போல் நம்பியுள்ளார் சிவகார்த்திகேயன். இதனால் சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள நம்ம வீட்டுப் பிள்ளை படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்கிற நம்பிக்கை திரையுலகில் பலருக்கும் உள்ளது. ரசிகர்களும் அதை நம்பித்தான் படம் பார்க்கச் செல்லவுள்ளார்கள். மேலும் இந்தப் படம் வெற்றி பெற்றால் அது இயக்குநர் பாண்டிராஜுக்கும் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். அடுத்தடுத்து இரு வெற்றிகளைக் கொடுக்கும் எந்தவொரு இயக்குநரையும் பெரிய கதாநாயகர்கள் விட்டுவைக்க மாட்டார்கள். இதனால் அவர் படங்களில் நடிக்க பலத்த போட்டியும் உருவாகும்.

நம்ம வீட்டுப் பிள்ளையின் வெற்றியில்தான் பல அடுத்தக் கட்டங்கள் நிகழவேண்டியிருக்கிறன. ஏமாற்றக்கூடாது இந்தப் படம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com