என் விதை நீ, என் விருட்சம் நீ: சூர்யாவைப் பாராட்டும் இயக்குநர் வஸந்த்

உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன்...
என் விதை நீ, என் விருட்சம் நீ: சூர்யாவைப் பாராட்டும் இயக்குநர் வஸந்த்

சூரரைப் போற்று படத்தில் நடித்த சூர்யாவைப் பாராட்டி இயக்குநர் வஸந்த் அவருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.

கடந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சூரரைப் போற்று படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

1997-ல் வஸந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார் சூர்யா. இந்நிலையில் சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நடிப்பைப் பாராட்டி அவருக்குக் கடிதம் எழுதியுள்ளார் வஸந்த். அதில் அவர் கூறியதாவது:

இந்தப் பாராட்டுக் கடிதம் உனக்கு இல்லை, நெடுமாறன் ராஜாங்கத்திற்கு. 

முதல் ஃபிரேமிலிருந்து கடைசி ஃபிரேம் வரை உன் ஆட்சிதான். காட்சிக்கு காட்சிக்கு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாய்.

தமிழ்த் திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த உன் அறிமுகத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று, கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் இதுதான் உன் உச்சம், இப்போதைக்கு. நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை, ரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய்.

முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை. இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்தத் தீவிரத் தன்மை, சாதிக்க வேண்டும் என்ற வெறி உன் கண்களில் இறுதிவரை தெறிக்கிறது, கனல் மணக்கும் பூக்களாக. ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது உன் நடிப்பு. எவ்வளவு இயல்பாக, அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்துக்கு மிகச் சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்.

உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன், HATS OFF TO YOU MY DEAR SURIYA. என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்துவிட முடியும். ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ. எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது என உச்சி முகர்ந்து மகிழ்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com