பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி. காலமானார்

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74.
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி. காலமானார்

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74.

ஆந்திராவின் நெல்லூரில் 1946-ம் வருடம் ஜூன் 4 அன்று பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 1966-ல் தெலுங்குப் படத்தில் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகராகத் திரையுலகில் அறிமுகமானார். பிறகு கன்னடம், தமிழ், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் பாடிய எஸ்.பி.பி., ஹிந்திப் படங்களிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். 1969-ல் எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்கிற பாடலைப் பாடி மிகப்பெரிய திருப்புமுனையைப் பெற்றார். 16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 1981 பிப்ரவரி 8 அன்று ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தினார். 

ஆறு தேசிய விருதுகள் பெற்றுள்ள எஸ்.பி.பி., சங்கராபரணம் என்கிற தெலுங்குப் படத்துக்காக முதல்முறையாகத் தேசிய விருதைப் பெற்றார். 1981-ல் ஏக் துஜே கே லியே படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் நுழைந்த எஸ்.பி.பி., இதற்காக தனது 2-வது தேசிய விருதைப் பெற்றார். பிறகு இரு தேசிய விருதுகளைத் தெலுங்குப் படப் பாடல்களுக்காகவும் தலா ஒரு தேசிய விருதை தமிழ், கன்னடப் படப் பாடல்களுக்காகவும் பெற்றார். 2001-ல் பத்மஸ்ரீ, 2011-ல் பத்மபூஷன் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. 

கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில் எஸ்.பி.பிக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. 

சிலநாள்களுக்கு முன்பு, எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றி அவருடைய மகன் சரண், ட்விட்டரில் தெரிவித்ததாவது: எஸ்.பி.பி.யின் உடல் நிலை தொடர்ந்து சீரான முன்னேற்றத்தில் உள்ளது. இயன்முறை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. திரவ உணவுகளை உட்கொள்கிறார். விரைவில் குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார் என்றார்.

எனினும் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தகவல் அளித்தது. கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து எஸ்.பி.பி. விரைவில் குணமாக வேண்டும் என்று பிரபலங்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்தார்கள்.

இந்நிலையில் மருத்துவமனையில் 51 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி. இன்று காலமானார். இத்தகவலை அவருடைய மகன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். எஸ்.பி.பி.யின் மறைவுக்குச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com