'கண்ணீரில் திரையுலகம்' - எஸ்.பி.பி. மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல்

'பாடும் நிலா' பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவினால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
எஸ்.பி. பாலசுப்ரமணியம்

சுமார் 50 ஆண்டுகளாக திரையுலகில் பல மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய 'பாடும் நிலா' பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 74.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவினால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

எஸ்.பி.பி. மறைவுக்கு திரையுலகினரின் இரங்கல் செய்தி:

ரஜினிகாந்த்: இன்றைக்கு மிகவும் சோகமான நாள். கடைசி வரை உயிருக்குப் போராடி அவர்  நம்மை விட்டு பிரிந்துள்ளார். அவரது மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எஸ்.பி.பி பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலே இல்லை. குரலைத் தாண்டி அவரை மக்கள் நேசிக்கக் காரணம் அவரது மனிதநேயம். பல மொழிகளில் பாடிய சிறப்பு அவருக்கே உரித்தானது. அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். எனினும், அவர் இன்று நம்முடன் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கமல் ஹாசன்: வெகுசில கலைஞர்களுக்கே அவர் வாழும் காலத்தில் புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்.பி.பி. அவர்கள். நாடு தழுவிய புகழ் மழையில் அவரை வழியனுப்பி வைத்த அவருடைய அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களில் ஒருவனான என் வணக்கங்கள். அவர் நனைந்த மழையில் என்னையும் நனைய அனுமதித்த அண்ணனுக்கு நன்றி. அவர் குரலின் நிழல் பதிப்பாகப் பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. பல மொழிகளில் நாலு தலைமுறை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர். ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் பாடும். 

கவிஞர் வைரமுத்து: 

ஆயிரம் காதல் கவிதைகள் 
பாடிய உனக்குக்
கண்ணீர்க் கவிதை வடிக்க 
வைத்துவிட்டதே காலம்; 
இசையை இழந்த மொழியாய் 
அழுகிறேன்.

நடிகர் சிவக்குமார்:

அரை நூற்றாண்டுக்கும் மேலாக
எத்தனை ஆயிரம் பாடல்களை
எத்தனை மொழிகளில் பாடிய
உன்னதக்கலைஞன் !
மூச்சுக்காற்று முழுவதையும்
பாடல் ஓசையாக மாற்றியவன் !
இமயத்தின் உச்சம் தொட்டும்
பணிவின் வடிவமாக
பண்பின் சிகரமாக
இறுதி உரையிலும்
வெளிப்படுத்தியவன்…
இதுவரை மக்களுக்கு
பாடியது போதும்
இனி என்னிடம் பாட வா
என்று இறைவன்
அழைத்துக் கொண்டான்!
போய் வா தம்பி!

டி.ராஜேந்தர்: தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்திய திரையுலகத்திற்கே பேரிழப்பு. பாலுவின் குரல் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அவரது மறைவு வேதனையாக இருக்கிறது. பாலில் தேன் கலந்தது போல மண்ணுலகம் இருக்கும்வரை அவரது காந்தக்குரல் இருக்கும். தாங்கமுடியாத இழப்பு. 

நடிகர் விவேக்:

பெரும் இழப்பு இசை உலகத்திற்கு பரந்து விரிந்த இந்த உலகமெல்லாம் பறந்து பறந்து 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது. சிலர் வாழ்வு சாதனை; சிலர் வாழ்வு சரித்திரம்; ஆனால் சிலர் வாழ்வோ சகாப்தம்! அப்படி ஒரு சகாப்தம் SPB. இன்னொரு SPB இனி என்றோ? எனப் பதிவிட்டுள்ளார். 

பாடகி ஷ்ரேயா கௌஷல்: 

புகழ்பெற்ற எஸ்.பி.பி. காலமானசெய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் மீண்டு வருவார் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம். 

நடிகர் தனுஷ்: 

எஸ்.பி.பி. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடும்ப உறுப்பினர், அனைவரின் வீட்டிலும் எப்போதும் எதிரொலிக்கும் குரல். நீங்களும், உங்கள் குரலும் தொடர்ந்து பல தலைமுறைகளுடன் இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது இரங்கல். 

நடிகர் பார்த்திபன்:

பேச முடியவில்லை ! 
அழுகை என் குரலை அடைக்கிறது. 
உலகைக் கவர்ந்தக் குரலையே இழந்துவிட்டு! ஊடகங்களிலிருந்து என் சோகத்தைப் பதிய 
இடைவிடாத அழைப்பு. எப்படி பேச? என்ன பேச? 
மீண்டும் வேண்டுகிறேன்-
அவர் குடும்பத்தாருக்கு(நமக்கும்) 
சமாதானமடைய சக்தி கிடைக்க!

இயக்குனர் ஷங்கர்: மிகச் சில பாடகர்கள் மட்டுமே தரம் மிகுந்த பாடகர்களாக இருக்கிறார்கள்.  ரசிகர்களை அடைவதற்கு முன்பே ஒரு பாடல் வெற்றி பெறுகிறது என்றால் அதில் எஸ்.பி.பி ஐயா முதலிடம். நாங்கள் அவரை இழந்தோம், அவருடைய குரலை அல்ல. எப்போதும் காற்றுடன் அவரது குரல் கலந்திருக்கும். 

எஸ்.பி.பியின் மறைவு இசை ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றம், வலி. எத்தனையோ பாடல்கள், எத்தனையோ இரவுகளுக்கு அவர் துணையாக இருந்திருக்கிறார். அவருடன் பணியாற்றியதில் நான் பெருமைகொள்கிறேன். அவரை என்றும் நினைவு கூர்கிறேன். 

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்

மேலும், தமிழ் மற்றும் இந்திய திரையுலகைச் சேர்ந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் பலர் எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் மகேஷ் பாபு: 

எஸ்.பி.பி. மறைந்தார் என்ற செய்தியை நம்ப மனம் மறுக்கிறது. அவரது அந்த ஆத்மார்த்தமான குரலை யாராலும் நெருங்க முடியாது. 

இளையராஜா: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com