பாடகர் எஸ்.பி.பி. இறந்தது எப்படி?: தனியார் மருத்துவமனை விளக்கம்

மூளையில் ரத்தக்கசிவு. இன்னொரு பக்கம் தொற்று தீவிரமாக இருந்தது...
பாடகர் எஸ்.பி.பி. இறந்தது எப்படி?: தனியார் மருத்துவமனை விளக்கம்

பாடகர் எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் காவல் துறை மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரைத் துறையினா், அரசியல் பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.

இந்நிலையில் எஸ்.பி.பி.க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவக் கட்டணம் தொடர்பாக வெளியான செய்திகளுக்கு எஸ்.பி.பி. மகன் சரண் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஆகியோர் பதில் அளித்துள்ளார்கள். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எஸ்.பி.பி.யின் இறப்பு குறித்து தனியார் மருத்துவமனை தரப்பில் கூறியதாவது:

எக்மோ, உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை எடுத்துக்கொள்வதில் இரண்டு விதமான பிரச்னைகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதில் ஒன்று தொற்று. உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். நுரையீரலில் மட்டுமல்லாமல் ரத்தத்திலும் தொற்று நேரடியாக ஏற்படலாம்.

எஸ்.பி.பி. இறப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தீவிரமான தொற்றுக்குரிய அறிகுறிகள் ஏற்பட்டன. 10-ல் 9 தடவை அதற்குரிய மருந்துகள் கொடுத்து குணமாக்கி விடலாம். ஆனால் 10-ல் 1 தடவை எந்தவொரு மருந்து கொடுத்தாலும் வேலை செய்யாது. அதுமாதிரியான தீவிர தொற்று தான் ஆரம்பித்தது.

எஸ்.பி.பி. இறப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு சிடி ஸ்கேன் செய்தோம். மூளையில் கொஞ்சம் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. எக்மோ சிகிச்சையில் ஏற்படக்கூடிய அறியப்பட்ட பின்விளைவாகும். அந்தப் பின்விளைவால் மூளையில் ரத்தக்கசிவு. இன்னொரு பக்கம் தொற்று தீவிரமாக இருந்தது. எவ்விதமான ஆன்டிபயாடிக்ஸ் கொடுத்தும் சரியாகவில்லை. இந்தத் தொற்றால் உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாகச் செயலிழக்க ஆரம்பித்துவிடும். எவ்வளவு சிகிச்சை கொடுத்தும் தொற்றின் பாதிப்பு அதிகமாகிக்கொண்டே தான் இருந்தது. இறுதியில் இதயமும் மூச்சுவிடுவதும் முழுவதுமாக நின்றுபோகும் கார்டியாக் அரெஸ்ட் எஸ்.பி.பி.க்கு ஏற்பட்டது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com