சுசாந்த் சிங் மரண வழக்கு: தனிமைப்படுத்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி பிகார் செல்ல அனுமதி!

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் தனிமைப்படுத்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி...
படம் - பிடிஐ
படம் - பிடிஐ

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் தனிமைப்படுத்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமைக்குள் மும்பையை விட்டு அவர் வெளியேற வேண்டும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34), கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது மரணம் நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. 

நடிகை ரியா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது பாட்னா காவல்துறையில் சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங் புகார் அளித்தார். சுசாந்த் சிங்கிடம் நிதி மோசடியில் ஈடுபட்டு மன ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகாரில் அவர் தெரிவித்தார். இதையடுத்து ரியா மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி. சஞ்சய் குமார் சிங் தெரிவித்தார். 

சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடா்பான வழக்கு விசாரணையை சிபிஐக்குப் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா். சிபிஐக்குப் பரிந்துரைக்க பிகார் அரசு முடிவு செய்ததை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுசாந்த் சிங் காதலி ரியா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகார் காவல்துறை 6 பிரிவுகள் ரியா மீது வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டுள்ளது. சிபிஐயின் சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.

சுசாந்த் சிங் மரணம் தொடா்பான வழக்கை விசாரிக்க மும்பை சென்ற பிகாா் காவல்துறையினா் 4 போ் வியாழக்கிழமை மாநிலம் திரும்பினா். சுசாந்த் சிங்கின் தங்கை, முன்னாள் காதலி அங்கிதா லோகன்டே, இயக்குநா் ருமி ஜாப்ரே, சுஷாந்த் சிங்கின் அண்டை வீட்டாா், மேலாளா், சமையல்காரா், மருத்துவா் ஆகியோா் உள்பட 10 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக பிகாா் காவல் அதிகாரி தெரிவித்தாா். சுசாந்த் சிங்கின் வங்கி பரிவா்த்தனை தொடா்பாக சில வங்கிகளில் விசாரணை நடத்தியதாகவும், சிறந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், மும்பை போலீஸாா் தங்களுக்கு ஒத்துழைப்பு அளித்ததாகவும் அவா் கூறினாா்.

சுசாந்த் மரண விவகாரத்தில் அவரது காதலி ரியாவுக்கு எதிராக சுசாந்தின் தந்தை அளித்த புகாா் தொடா்பாக விசாரிப்பதற்காக ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி கடந்த ஆகஸ்ட் 2 அன்று மும்பை சென்றார். ஆனால், கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் வினய் திவாரியை மும்பை மாநகராட்சி தனிமைப்படுத்தியது. 

வினய் திவாரியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமைக்குள் விடுவிக்கவில்லை என்றால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிகாா் டிஜிபி குப்தேஷ்வா் பாண்டே எச்சரித்தாா். 

மும்பை சென்ற வினய் திவாரியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தனிமைப்படுத்தினா். இதற்கு பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் கண்டனம் தெரிவித்திருந்தாா். உச்சநீதிமன்றமும் அதிருப்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட வினய் திவாரி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமைக்குள் அவர் மும்பையை விட்டு வெளியேற வேண்டும் என்று மும்பை மாகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com