மீரா மிதுன் சர்ச்சை: பாரதிராஜாவுக்கு நடிகர் சூர்யா நன்றி

எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும்...
மீரா மிதுன் சர்ச்சை: பாரதிராஜாவுக்கு நடிகர் சூர்யா நன்றி

மீரா மிதுன் சர்ச்சை தொடர்பாக பாரதிராஜா வெளியிட்ட அறிக்கைக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழை அடைந்த மீரா மிதுன் - 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி என மூன்று படங்களில் நடித்துள்ளார். 

ட்விட்டரில் நடிகர்கள் விஜய், சூர்யாவைப் பற்றி சமீபத்தில் அவர் கூறிய கருத்துகளுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து தவறாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது பட்டுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள்.

நடிகர்கள் விஜய், சூர்யாவைப் பற்றி தவறாகப் பேசி வரும் நடிகை மீரா மிதுனுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்.

கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!

திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை அழகுறக் கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டு கால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே! 

அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீரா மிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளைக் கடிவாளம் போடாமல் வரம்பு மீறி சிதறியுள்ளார்.

திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினராக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்.

சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கெளரவமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல.

மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி, எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப் பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும் என்றார். 

இந்நிலையில் 2018 ஜனவரியில் வெளியிட்ட ட்வீட்டைத் தற்போது ரீட்வீட் செய்துள்ளார் சூர்யா. அப்போது அவர் கூறியதாவது:

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற என்றார். 

பாரதிராஜா நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு நன்றி தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் சூர்யா. அதில் அவர் கூறியதாவது:

எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com