திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வு மாறியுள்ளதா?: இயக்குநர் சேரன் கேள்வி

திரையரங்கம் மீண்டும் தொடங்க எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள் எனக் கேள்வி...
திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வு மாறியுள்ளதா?: இயக்குநர் சேரன் கேள்வி

அகன்ற திரையில் படம் பார்க்கும் உணர்வு மாறியிருப்பதை ஏற்கிறீர்களா என இயக்குநர் சேரன் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். எனவே, கரோனா ஊரடங்குத் தளர்வில் திரையரங்குகளை உரிய விதிமுறைகளுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். நாள்தோறும் குறைந்தபட்சம் 2 காட்சிகளுக்காவது அனுமதியளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாக இருந்தது.

ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் மீண்டும் இயங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியானதால் அரசின் அறிவிப்பைத் திரையரங்கு உரிமையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். 

கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, மத்திய அரசு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தேசிய அளவிலான பொது முடக்கத்தை அறிவித்தது. எனினும், பொருளாதார செயல்பாடுகள், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் முதல் பொது முடக்கத் தளா்வை மத்திய அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது.

மூன்றாவது கட்ட பொது முடக்கத் தளா்வுக்கான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. பள்ளி, கல்லூரிகள், மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மதுக்கூடங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை ஆகஸ்ட் 31 வரை திறக்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது.

பிறகு, தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். திரையரங்குகள் இயங்க அனுமதி இல்லை எனத் தமிழக அரசு தெரிவித்தது. இதனால் தமிழ்த் திரையுலகம் ஏமாற்றமடைந்துள்ளது.

இந்நிலையில் திரையுலகின் நிலை குறித்து இயக்குநர் சேரன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

சிவாஜி, எம்.ஜி.ஆர் என விசில் அடித்து படம் பார்த்து ரஜினி, கமல் என கட் அவுட் வைத்து, விஜய், அஜித் எனப் பாலாவிஷேகம் செய்து படம் பார்த்த அந்த திரையரங்க பிரமாண்டம் 5 மாதங்களாக முடங்கி கிடக்கிறது. நல்ல படங்கள் வெளியாகும்போது கொண்டாடித் தீர்த்த மக்கள் கைபோனில் ஏதோ ஒரு மொழிப்படத்தை வெறித்து பார்த்தபடி வியந்து கிடக்கிறார்கள். 

எதிர்காலத் திரையுலகப் பயணம் எந்தத் திசை எனக் கணிக்க முடியாமல் குழம்பிக் கிடக்கிறது திரையுலகம். இதில் மக்களின் கருத்து என்ன? அகன்ற திரையில் படம் பார்க்கும் உணர்வு மாறியிருப்பதை ஏற்கிறீர்களா? திரையரங்கம் மீண்டும் தொடங்க எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com