நாளை முதல் தொடங்கும் படப்பிடிப்புகள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

படப்பிடிப்புத் தளங்களில் முறையான சுகாதார நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாளை முதல் தொடங்கும் படப்பிடிப்புகள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

திரைப்படப் படப்பிடிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

திரைப்படப் படப்பிடிப்புகளைப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கேமரா முன் நிற்கும் நடிகர்கள் தவிர மற்றவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பின்னர், பொது முடக்கத்தில் தளர்வுகளை அளித்து பல்வேறு தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல திரைப்படப் படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டுமென அத்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் பல்வேறு தளா்வுகளை அளித்து தமிழக முதல்வா் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே நேரத்தில் 75 பேருக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது, பாா்வையாளா்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்தார். 

பல்வேறு கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்களுடன் திரைப்படப் படப்பிடிப்புகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:

அதிகபட்சமாக 75 நடிகா், நடிகைகள், தொழில்நுட்பப் பணியாளா்களைக் கொண்டு படப்பிடிப்பானது செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடத்தலாம்.

படப்பிடிப்புத் தளங்களில் முறையான சுகாதார நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டும். படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது இடத்தை படப்பிடிப்புக்கு முன்பும் பிறகும் கண்டிப்பாக கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். 

படப்பிடிப்புத் தளம், ஸ்டுடியோக்களில் ஆறடி தொலைவு சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். 

படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகா்கள், நடிகைகளைத் தவிர மற்ற தொழில்நுட்பக் கலைஞா்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். 

படப்பிடிப்புத் தளங்களில் பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது.

படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்களின் மருத்துவ விவரம், பயண விவரம் போன்றவற்றைக் கண்காணித்து சரியாகக் கடைப்பிடிக்கவேண்டும்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். தயாரிப்பாளா்கள் அதனை உறுதி செய்து கொண்டு படப்பிடிப்புகள் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com