
வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படங்கள் ஒரே நாளில் திரையரங்கிலும் ஓடிடி தளத்திலும் வெளியாகவுள்ளன.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இதனால் திரையரங்குகளில் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இல்லாமல் இருந்தது. கரோனாவால் திரைப்படத் துறையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில், சினிமாவின் மாற்றுத் தளமாக ‘ஓடிடி’ அமைந்திருக்கிறது. சினிமா ரசிகர்கள் வீட்டுக்குள் இருந்து தொலைக்காட்சி, இணையம் வழியாக படங்களைப் பார்த்து வருகிறார்கள். இதனால் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் அதிகம் பலனடைந்துள்ளன.
இந்நிலையில் ஹாலிவுட்டில் புதிய புரட்சியாக, வெளியாகும் படத்தை ஒரே நாளில் திரையரங்கிலும் ஓடிடி தளத்திலும் பார்க்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படங்களை இந்த வசதியில் பார்க்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வார்னர் பிரதர்ஸ் தயாரித்துள்ள வொண்டர் வுமன் 1984 படம், ஜூன் மாதம் வெளியாகவிருந்தது. பிறகு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வொண்டர் வுமன் 184 படம் திரையரங்கிலும் ஹெச்பிஓ மேக்ஸ் ஓடிடி தளத்திலும் ஒரே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல அடுத்த வருடம் மேட்ரிக்ஸ் 4, டாம் அண்ட் ஜெர்ரி உள்ளிட்ட 17 படங்கள் ஒரே நாளில் திரையரங்கிலும் ஓடிடி தளத்திலும் வெளியாகும் என வார்னர் பிரதர்ஸ் அறிவித்துள்ளது. ஓடிடி தளத்தில் 31 நாள்களுக்கு மட்டுமே பார்க்க முடியும். இதன்பிறகு திரையரங்கில் மட்டுமே அப்படங்களை பார்க்க முடியும் என வார்னர் பிரதர்ஸ் தெரிவித்துள்ளது. இந்த வசதி அமெரிக்க சினிமா ரசிகர்களுக்கானது. வெளிநாடுகளில் 17 படங்களையும் திரையரங்குகளில் மட்டுமே பார்க்க முடியும். திரையுலகில் இந்த நடைமுறை புதிய மாற்றத்தை உண்டு பண்ணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
I got you something nice this year:
— Warner Bros. Pictures (@wbpictures) December 3, 2020
The biggest movie premieres
In theaters and on HBO Max the exact same day
Beginning December 25 with #WonderWoman1984#HBOMax #WBPictureshttps://t.co/QA8MlErRYQ pic.twitter.com/VuYkTa6BGx