இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப் பதிவு

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப் பதிவு

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள். இசை - அனிருத், ஒளிப்பதிவு - ரத்னவேலு.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. பிறகு ஹைதராபாத், ராஜமுந்திரி சிறைச்சாலை, போபாலில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. கமல் ஹாசனின் காலில் சிறிய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது. தற்போது கமல் குணமடைந்து சென்னை பூந்தமல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.

பூந்தமல்லி அருகே உள்ள இ.வி.பி. பொழுதுபோக்குப் பூங்காவில் அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நடைபெற்ற படப்பிடிப்பில் கமல் ஹாசன், காஜல் அகர்வால் போன்றோர் தொடர்புடைய காட்சிகளைப் படமாக்கினார் இயக்குநர் ஷங்கர். 

மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்தது. இதில் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா, படப்பிடிப்பு ஊழியர்கள் மது (29), சந்திரன் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்கள். படப்பிடிப்புத் தளத்தில் இருந்த ஒரு பெண் உள்பட 9 பேர் காயமடைந்தார்கள். உடனே அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து லைகா நிறுவனமும் கமலும் ட்வீட் செய்து தங்களுடைய வருத்தங்களைத் தெரிவித்துள்ளார்கள்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நசரத்பேட்டை காவல்துறையினர் கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை ஏற்படுத்துதல், உபகரணங்களைத் தவறாகக் கையாண்டு மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். கிரேன் ஆபரேட்டர் ராஜன் தலைமறைவாகிவிட்டதால் அவரைக் காவலர்கள் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com