நம்மை எப்போது எங்கே வைக்க வேண்டும் என்பது கடவுளுக்குத் தெரியும்: தனுஷ் பேச்சு

எப்படிப் போகிறதென்று சரியாகத் தகவல் தெரியவில்லை. இதனால் பதற்றமாக இருந்தேன்...
நம்மை எப்போது எங்கே வைக்க வேண்டும் என்பது கடவுளுக்குத் தெரியும்: தனுஷ் பேச்சு

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்தது. இப்படத்தை தாணு தயாரித்தார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்தார். அக்டோபர் 4 அன்று வெளியான அசுரன் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. 

இந்தப் படத்தில் 100-வது நாள் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது:

இதுபோன்ற விழாக்களில் நாம் பேசுவது மட்டும் தான் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வெற்றி மாறனுக்கும் எனக்கும் தயாரிப்பாளர் தாணு கொடுத்த சுதந்திரம் தான் அசுரனாக உருவானது. இக்கட்டான சூழல்களில் எனக்கு தாணு சார் உதவியுள்ளார். நான் அதை மறக்கமாட்டேன். 

அது ஒரு கனா காலம் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் அம்மாவை நினைத்துக் கனவில் இருந்து கண் விழித்துக் கதறி அழ வேண்டிய காட்சி. அப்போது எனக்கு 20 வயது. பாலுமகேந்திரா சாரிடம், வெற்றியை (வெற்றி மாறன்) இந்தக் காட்சியை நடித்துக் காட்டச் சொல்லுங்கள். எப்படிச் செய்கிறார் என்று பார்த்துக்கொள்கிறேன் என்றேன். உதவி இயக்குநர்களை நடித்துக்காட்டச் சொன்னால் அதை அவர்கள் செய்வது எளிதாக இருக்காது. நான் விளையாட்டுக்காகத்தான் சொன்னேன். ஆனால் வெற்றி மாறன் அற்புதமாக நடித்து, பாலுமகேந்திரா சாரே போதும் என்று சொல்லும் அளவுக்கு நடித்தார். நான் வெற்றி மாறன் போல நடிக்காமல் வேறு மாதிரி நடித்தேன். காட்சி படமாக்கப்பட்ட பிறகு இதுகுறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். பாலுமகேந்திரா சார் என்னை அழைத்து, என்ன யோசிக்கிறாய் எனக் கேட்டார். சார், நான் செய்வது பிடித்திருந்ததா அல்லது வெற்றி செய்தது பிடித்திருந்ததா? அவரளவுக்கு நான் செய்தேனா எனச் சந்தேகமாக உள்ளது என்று அவரிடம் கேட்டேன். அவர் சிரித்தார். என் மகன்களிடம் இருந்து ஒன்றைத் தேர்வு செய்யச் சொல்கிறாயா என்று கேட்டார். இதற்கு நான் பதில் அளிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அன்று தன் பிள்ளைகளாக எங்களைப் பார்த்தார். அன்றிலிருந்து நானும் வெற்றி மாறனும் சகோதரர்களாகவே இருந்து வருகிறோம். 

சிவசாமி கதாபாத்திரத்தை என்னால் ஏற்று நடிக்க முடியும் என்று என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நான் வெற்றிமாறனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இதுபோல கதாபாத்திரம் மீண்டும் எனக்குக் கிடைக்குமா எனத் தெரியவில்லை. 

இந்தப் படம் வெளியாகும்போது நான் ஊரில் இல்லை. லண்டனில் இருந்தேன். எப்படிப் போகிறதென்று சரியாகத் தகவல் தெரியவில்லை. இதனால் பதற்றமாக இருந்தேன். என் அம்மா போன் பண்ணி, பெரிய வெற்றி எனச் சொல்கிறார்கள். இப்போது பார்த்து நீ தொலைவில் இருக்கிறாயே என்றார். வெற்றி தூரமாக இல்லை அம்மா. என் பக்கத்தில் தான் உள்ளது என்றேன், வெற்றிமாறனை நினைத்து. 

தோல்வியைத் தான் நாம் தழுவிக்கொள்ள வேண்டும். வெற்றியைத் தூரமாக நின்றுதான் ரசிக்கவேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை எப்படிச் சேதப்படுத்தும் எனத் தெரியாது. நம்மை எப்போது எங்கே வைக்க வேண்டும் என்பது கடவுளுக்குத் தெரியும். அதனால் தான் இப்படியொரு வெற்றி கிடைக்கும்போது என்னைத் தொலைவில் இருக்க வைத்துவிட்டார். 

அசுரன் பட டப்பிங்கின்போதும் நான் இங்கே இல்லை. விடியோ கால் வழியாக லண்டனிலிருந்து தான் டப்பிங் செய்தேன். வட்டார மொழியை நான் சரியாகச் சொல்லவேண்டும் என்பதற்காக சென்னையிலிருந்து லண்டன் வந்து என் அருகில் உட்கார்ந்து உதவி செய்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். நானும் அவரும் இணைந்து படம் செய்தாலும் எந்தப் பிரதிபலனும் இல்லாமல் இதை அவர் செய்து கொடுத்தார்.

எனக்கு நண்பர்கள் குறைவு தான். நாம் என்ன கேட்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அல்லது நம்மிடம் எதிர்பார்த்தோ ஆயிரம் நண்பர்கள் இருப்பதை விட ஒரு நண்பர் கூட இருந்து நீ செய்வது தவறு, நீ நடித்த படம் நன்றாக இல்லை என உண்மையைச் சொல்கிறவர் இருந்தால் போதும். அதுபோல ஒரு நண்பர் தான் வெற்றி மாறன். 

ஆரம்பத்தில், இவ்வளவு சீக்கிரமாகப் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறோம், எல்லாம் சரியாக வருகிறதா எனச் சந்தேகமாக உள்ளது என்று சொன்னார் வெற்றிமாறன். அவசரத்தில் கிண்டும் உப்புமா தான் உலகப் புகழ் பெறும் என்று அவருகுப் பதில் அளித்தேன். ஆனால் உப்புமா இல்லை, ஃபுல்மீல்ஸே செய்துவிட்டார் என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com