ஒரு அரசியல்வாதியுடன் சேர்ந்து படம் எடுப்பதா என்கிற ஐயத்தை தகர்த்தெறிந்தார் ஜெ. அன்பழகன்: இயக்குநர் அமீர் இரங்கல்

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நட்பை வளர்த்து என் உள்ளத்தில் குடி புகுந்து கொண்ட ஆளுமை...
ஒரு அரசியல்வாதியுடன் சேர்ந்து படம் எடுப்பதா என்கிற ஐயத்தை தகர்த்தெறிந்தார் ஜெ. அன்பழகன்: இயக்குநர் அமீர் இரங்கல்

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் மறைவுக்கு இயக்குநர் அமீர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெ.அன்பழகன், கடந்த வாரம் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர மூச்சுத் திணறல் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு 80 சதவீத பிராண வாயு, செயற்கை சுவாச (வென்டிலேட்டா்) கருவியின் உதவியுடன் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் (62) இன்று காலை காலமானார்.

ஜெயம் ரவி நடிப்பில் அமீர் இயக்கிய ஆதிபகவன் படத்தைத் தயாரித்தார் ஜெ. அன்பழகன்.

இதையடுத்து ஜெ. அன்பழகனின் மறைவுக்கு இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எனதருமை அண்ணனும் திமுக எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்கிற செய்தியைக் கேட்டறிந்த நாளில் இருந்தே மனம் வேதனைப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரது மகன் ராஜா அன்பழகனிடம் அண்ணனின் உடல் நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்துக்கொண்டே இருந்தேன். இந்நிலையில் இன்று காலை அண்ணனின் மறைவுச் செய்தி குறித்து கேட்ட நிமிடம் முதல் இப்போது வரை அந்த உண்மைச் செய்தியை ஏற்க என் மனம் மறுக்கிறது. காரணம் அவரின் பழகும் தன்மை, நேர்மையான பேச்சு, அரசியலற்ற அன்பு, உண்மையைச் சொல்லும் துணிச்சல், எதிரே இருப்பவரின் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்த்து முடிவெடுக்கும் பண்பு... எனச் சொல்லிக்கொண்டே போகலாம், அவரிடம் நிறைந்திருந்த பல்வேறு குணாதிசயங்களை.

ஒரு அரசியல்வாதியுடன் சேர்ந்து படம் எடுப்பதா என்கிற என்னுடைய ஐயத்தை எங்கள் முதல் சந்திப்பிலேயே தகர்த்தெறிந்து, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நட்பை வளர்த்து என் உள்ளத்தில் குடி புகுந்து கொண்ட ஆளுமை அவர். ஒரு நல்ல தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக, தயாரிப்பாளர் சங்கத்தின் மீது அக்கறை கொண்டவராக, தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற தொலைநோக்குச் சிந்தனை கொண்டவராக இப்படிப் பல கோணங்களில் அவரை நான் வெகு அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை இன்று நான் இழந்திருக்கிறேன் என்கிற வேதனையோடு மட்டுமல்லாமல் அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவுகளின் உள்ளத்தில் சாந்தியையும் அவரது இறப்பிற்குப் பின் உள்ள வாழ்க்கையில் அமைதியையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com