உங்க வேலையைப் பாருங்க: திருமண சர்ச்சை குறித்து நடிகைகள் வனிதா விஜயகுமார் - லட்சுமி ராமகிருஷ்ணன் மோதல்!

என்னுடைய முடிவுகளுக்கு உங்களுடைய ஆதரவோ அங்கீகாரமோ எனக்கு அவசியம் கிடையாது...
உங்க வேலையைப் பாருங்க: திருமண சர்ச்சை குறித்து நடிகைகள் வனிதா விஜயகுமார் - லட்சுமி ராமகிருஷ்ணன் மோதல்!

வனிதா விஜயகுமாரின் திருமணம் மற்றும் அது தொடர்பான காவல்துறை புகார் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இதற்காக அவருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.

1995-ல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார், கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகப் புகழை அடைந்தார். 

நடிகர் ஆகாஷை முதலில் திருமணம் செய்த வனிதா, 2007-ல் அவரை விவாகரத்து செய்தார். ஆனந்த் ராஜனை 2007-ல் திருமணம் செய்தார் வனிதா. பிறகு 2012-ல் ஆனந்த் ராஜனையும் வனிதா விவாகரத்து செய்தார். வனிதாவுக்கு விஜய ஸ்ரீஹரி என்கிற மகனும் ஜோவிதா, ஜெய்நிதா என்கிற இரு மகள்களும் உள்ளார்கள். மகன் ஸ்ரீஹரி ஆகாஷுடனும் இரு மகள்கள் வனிதாவுடனும் வசித்து வருகிறார்கள். 

சென்னை போரூரில் உள்ள வனிதாவின் இல்லத்தில் கிறிஸ்துவ முறைப்படி விஜயகுமார் - விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் ஆகியோரின் திருமணம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இத்திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டும் கலந்துகொண்டார்கள்.

எனினும், திடீர் திருப்பமாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் (41), வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளன. என்னிடம் விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணம் செய்துள்ளார் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திருமணத்துக்குச் சில நாள்களுக்கு முன்பே அவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். 

இந்தப் புகாருக்கு வனிதா விஜயகுமார் பதில் அளித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

எலிசபெத் ஹெலன் கொடுத்த புகாரினால் நான் ஏமாந்துவிட்டதாகப் பலரும் எண்ணுகிறார்கள். நான் ஏமாறவில்லை. எட்டு வருடங்களுக்கு முன்பே மனைவியைப் பிரிந்துவிட்டார் பீட்டர். அவரைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். இருவரும் தனித்தனியாகத்தான் வாழ்ந்துவந்தார்கள். அவர்களுக்கிடையே எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது. இந்தப் பிரச்னையை எங்கள் வழக்கறிஞர் பார்த்துக்கொள்வார்கள். 

அவர்கள் ஒரு கோடி ரூபாய் கேட்பதாகச் சொல்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு நாங்கள் எங்கே போவது? இந்தப் புகாரினால் எனது திருமண வாழ்க்கையில் எந்தப் பிரச்னையும் இல்லை. பணம் பறிப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள். எனவே இந்தப் பிரச்னையைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி அளித்துள்ள புகார் குறித்த செய்தி வெளியானதற்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது:

செய்தியை இப்போதுதான் பார்த்தேன். அந்த மனிதருக்கு ஏற்கெனவே திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளன. விவாகரத்து ஆகவில்லை. படிப்பும் அனுபவமும் கொண்ட ஒருவர் எப்படி இந்தத் தவறைச் செய்ய முடியும்? அதிர்ச்சியடைந்துள்ளேன். வனிதா - பீட்டர் பால் திருமணம் முடியும் வரை ஏன் முதல் மனைவி புகாரளிக்கவில்லை? திருமணத்தை ஏன் நிறுத்தவில்லை?

அவர் (வனிதா விஜயகுமார்) பல கடினமான சூழல்களை எதிர்கொண்டுள்ளார். அவற்றை வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்த உறவாவது அவருக்கு நல்லவிதமாக அமையும் என நினைத்தேன். அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தையும் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை என்றார். 

தனது திருமண வாழ்க்கை குறித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்துகளுக்குக் கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார் வனிதா விஜயகுமார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது: 

உங்களுடைய ட்வீட்களை நீக்குங்கள். உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். நீங்கள் ஒன்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலோ குடும்பத்தைக் கெடுக்கும் உங்களுடைய நிகழ்ச்சியிலோ இல்லை. நான் நன்குப் படித்தவர். சட்டரீதியான அறிவு கொண்டவர். யாருடைய ஆதரவின்றியும் என் வாழ்க்கையை என்னால் பார்த்துக்கொள்ள முடியும். என்னுடைய முடிவுகளுக்கு உங்களுடைய ஆதரவோ அங்கீகாரமோ எனக்கு அவசியம் கிடையாது. இந்தப் பிரச்னையிலிருந்து தள்ளி இருங்கள். இது பொதுப் பிரச்னையோ உங்கள் நிகழ்ச்சியோ கிடையாது என்றார். 

வனிதாவின் பதில்களுக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் எழுதியதாவது:

வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்வோமா? முறைப்படி விவாகரத்து பெறாமல் நடைபெறும் மறுமணங்களைக் குறித்த என் கருத்தை வெளிப்படுத்தினேன். பாலியல் வன்முறை, சமீபத்திய தந்தை - மகன் மரணம் குறித்து நான் கருத்தை வெளிப்படுத்தும்போது இத்தனை எதிர்வினைகள் எனக்கு வருவதில்லை என்றார்.

பிறகு வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் இவ்வாறு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

உங்களுடைய தேர்வு குறித்து நான் கேள்வி எழுப்பவில்லை. ஒருவர் சமூக நடைமுறையை, சட்டத்தை மீறும்போது சமூகமும் நானும் அந்த முடிவைக் கேள்விக்குள்ளாக்குவோம். சட்டரீதியிலான விவாகரத்து இன்றி நடைபெறும் மறுமணம் என்கிற அந்த முடிவை மட்டுமே கேட்போம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com