விஜய் சேதுபதி படம் வெளியீடு: லிங்குசாமி பட நிறுவனம் விளக்கம்

விஜய் சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படத்தின் வெளியீடு தொடர்பாக...
விஜய் சேதுபதி படம் வெளியீடு: லிங்குசாமி பட நிறுவனம் விளக்கம்

விஜய் சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படத்தின் வெளியீடு தொடர்பாக அப்படத்தைத் தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

லிங்குசாமி தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கிய படம் - இடம் பொருள் ஏவல். இதன் படப்பிடிப்பு 2013-ல் தொடங்கி, 2014-ல் முடிவடைந்தது.

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். 2014 டிசம்பரில் பாடல்கள் வெளிவந்தன. யுவன் - வைரமுத்து கூட்டணி இந்தப் படத்திலிருந்து தான் முதல்முதலாக இணைந்து பணியாற்ற ஆரம்பித்தது.

தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி சேர்ந்த படம் இது. தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக நீண்ட நாள்களாக வெளிவராமல் இருந்தது.  

இந்நிலையில் இந்தப் படத்துக்கு ஒரு விடிவுகாலம் பிறந்துள்ளது. ஊரடங்கு காலம் முடிந்து திரையரங்குகள் இயங்க ஆரம்பித்த பிறகு இந்தப் படத்தை வெளியிட லிங்குசாமி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் கூறியதாவது: சூதர்மனைதனில் உருவப்படும் சேலையை பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் "கிருஷ்ணா கிருஷ்ணா" எனப் பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல். இது திரைப்படந்தான், ஆனால் எனக்கு பிள்ளை. இயக்குநர் திரு. லிங்குசாமிக்கு நன்றி. #இடம்பொருள்ஏவல் வெளியீடு என்று எழுதியுள்ளார்.

இந்நிலையில், இடம் பொருள் ஏவல் படத்தின் வெளியீடு தொடர்பாக அப்படத்தைத் தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய, இடம் பொருள் ஏவல் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது என்று சிலர் ட்விட்டரில் செய்தி பரப்பி வருவதாகத் தெரிகிறது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், இடம் பொருள் ஏவல் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். கரோனா தொற்று ஊரடங்கு முடிந்த பின்பு, எங்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்து பேசி, எங்கள் திரைப்படத்திற்கு ஒரு நல்ல வெளியீட்டுத் தேதியை அறிவிப்போம். அதுவரை தவறான செய்திகளைப் பகிர வேண்டாம் என்று எங்கள் நிறுவனம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com