சதவீத அடிப்படையில் நடிகர்களுக்குச் சம்பளம்: தமிழ் சினிமாவில் புதிய முயற்சி

திரைத்துறையை மீட்கும் ஒரு முயற்சியாக சதவீத அடிப்படையில் நடிகர்களுக்குச் சம்பளம் வழங்கும் ஒரு புதிய முறையை
சதவீத அடிப்படையில் நடிகர்களுக்குச் சம்பளம்: தமிழ் சினிமாவில் புதிய முயற்சி

திரைத்துறையை மீட்கும் ஒரு முயற்சியாக சதவீத அடிப்படையில் நடிகர்களுக்குச் சம்பளம் வழங்கும் ஒரு புதிய முறையை தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியும் திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியமும் மேற்கொண்டுள்ளார்கள்.

இதுகுறித்த ஆடியோ பதிவை திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கரோனா காலத்தில் ஏதாவது செய்யலாம் எனச் சொல்லி சில யோசனைகள் சொன்னார் பிரமிட் நடராஜன் சார். திரையுலகில் பல புதுமைகளைப் புகுத்திய தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி சாரிடம் இதுபற்றி பேசினேன்.

தமிழ் சினிமாவில் சதவீத அடிப்படையில் நடிகர், இயக்குநர்களுக்குச் சம்பளம் வழங்கலாம் என்றேன். இதற்கு அவர் சம்மதித்தார். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் பிரமிட் நடராஜன் பேசினார். செளத்ரி சாரே சொல்லிவிட்டதால் இந்த முயற்சிக்கு ஒப்புக்கொள்கிறேன் என்றார். தாடி வெங்கட் சொன்ன கதை, ரவிக்குமாருக்கும் செளத்ரிக்கும் பிடித்துப்போனது. முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள சத்யராஜும் கெளரவ வேடங்களில் நடிக்கவுள்ள விஜய் சேதுபதியும் ஆர். பார்த்திபனும் சதவீத அடிப்படையில் சம்பளம் பெறுவதற்குச் சம்மதித்தார்கள்.

ரூ. 2 கோடி முதலீட்டில் 30 நாள்களில் படப்பிடிப்பு முடிவடையும். லாபத்தில் நடிகர்களுக்குப் பங்கில்லை. வியாபாரத்தில் தான் பங்கு. இயக்குநருக்கு 1% மற்றும் நடிகருக்கு 2% சம்பளம் என்றால் வியாபாரத்துக்கு ஏற்றபடி அமையும். பணப் பரிமாற்றம் எல்லாம் வெள்ளையில்தான். கதை உள்ளிட்ட படம் உருவாக்கப் பணிகளை செளத்ரியும் கணக்குளை நானும் பார்த்துக்கொள்வோம். தயாரிப்புப் பணிகளை பிரமிட் நடராஜன் வடிவமைக்கவுள்ளார்.

ரூ. 2 கோடிக்கான தொகையை 200 பேரிடமும் பெறவுள்ளோம். ஒரு ஷேருக்கு ஒரு லட்ச ரூபாய். ஒரு நபருக்கு 10 ஷேர் வரை தரவுள்ளோம். திரையுலகினர் உள்ளிட்ட யாரும் இதில் பங்கேற்கலாம். 150 ஷேர் விற்கப்பட்டுவிட்டால் மீதமுள்ள 50 ஷேர்களை நானும் செளத்ரியும் பிரித்துக்கொள்வோம். யாருமே முன்வராவிட்டாலும் நானும் செளத்ரியும் இணைந்து தயாரிக்க முடிவு செய்துவிட்டோம். 60 நாள்களில் படத்தைத் திரையரங்கில் வெளியிடுவோம். குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும்.

சூப்பர் குட் பிலிம்ஸில் ஒரு சர்வர் நிறுவப்படும். எத்தனை பேர் படம் பார்த்துள்ளார்கள் என்கிற கணக்கு தெளிவாகத் தெரிந்துவிடும். இனிமேல் நடிகர்கள், இயக்குநர்கள் சதவீத அடிப்படையில்தான் சம்பளம் வாங்கவேண்டும். இதன்மூலம் அனைவருக்குமே நல்லது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com