விஜய் ஆண்டனி திரைக்கதையில் உருவாகவுள்ள பிச்சைக்காரன் 2

பிச்சைக்காரன் 2 படத்துக்கான கதையைத் தான் எழுதி வருவதாக ஒரு பேட்டியில்...
விஜய் ஆண்டனி திரைக்கதையில் உருவாகவுள்ள பிச்சைக்காரன் 2

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சாதனை டைடஸ் நடித்து 2016-ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் - பிச்சைக்காரன்.

ஒரு விபத்தில் கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறார் கதாநாயகனின் அம்மா. எந்த மருத்துவத்தாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. எல்லா வசதி வாய்ப்புகளையும் துறந்து, அடையாளத்தை வெளிப்படுத்தாமல் 48 நாள்கள் பிச்சைக்காரனாக நீ வாழ்ந்தால் உன் அம்மா பிழைப்பார் என ஒரு சாமியார் சொல்கிறார். அதை நம்பி தன் பணக்கார வாழ்க்கையைத் துறந்து பிச்சைக்காரனாக வாழ்கிறார் கதாநாயகன். வசதியான ஒருவருக்குப் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்கிற மையக் கதையுடன் பிச்சைக்காரர்களின் இயல்பான வாழ்க்கையையும் இணைத்து சுவாரசியமாகக் கதை செய்திருந்தார் சசி. பிச்சைக்காரனாக நடிக்கும் செல்வந்தர் என்கிற கதையே தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் புதிதாக அமைந்தது.

இந்தப் படம் தமிழில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சாதனை செய்தது. தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்ட இந்தப் படம் (பிச்சகாடு) 100 நாள்கள் ஓடி அசத்தியது. ரூ. 50 லட்சம் உரிமைக்கு விற்கப்பட்ட தெலுங்குப் பிச்சைக்காரன், ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. தமிழில் ஹிட், தெலுங்கில் சூப்பர் ஹிட் என்கிற பெயரை எடுத்தது. வெளியான அதே வருடம் சன் டிவியில் ஒளிபரப்பாகி, ரேட்டிங்கிலும் சாதனை படைத்தது பிச்சைக்காரன் படம்.

இந்தளவுக்கு விஜய் ஆண்டனிக்கும் இயக்குநர் சசிக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

பிச்சைக்காரன் 2 படத்தில் சசி இடம்பெறவில்லை. அவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட சில படங்கள் உள்ளதால் பிச்சைக்காரன் 2 படத்துக்கான கதையைத் தான் எழுதி வருவதாக ஒரு பேட்டியில் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். இயக்கம், கதாநாயகி குறித்த விவரங்கள் இனிமேல் தான் தெரியவரும். ஊரடங்குக் காலம் முடிந்த பிறகு பிச்சைக்காரன் 2 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com