ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் வருத்தத்தில் இருந்தார்: இளம் நடிகையின் தற்கொலை குறித்து தந்தை பேட்டி

ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்தானதால் பிரெக்‌ஷா நிம்மதியில்லாமல் இருந்தார்...
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் வருத்தத்தில் இருந்தார்: இளம் நடிகையின் தற்கொலை குறித்து தந்தை பேட்டி

க்ரைம் பேட்ரோல் தொடரில் நடித்த 25 வயது இளம் நடிகை பிரெக்‌ஷா மேத்தா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மனவருத்தத்தில் இருந்ததால் அவருடைய தந்தை பேட்டியளித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளும் இயங்குவதில்லை. இதனால் திரையுலகம் மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது.

சில நாள்களுக்கு முன்பு தொலைக்காட்சி நடிகர் மன்மீத் கிரேவால், பணப் பிரச்னை காரணமாக மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் மற்றொரு தொலைக்காட்சி நட்சத்திரமும் இதே முடிவை எடுத்துள்ளார்.

லால் இஷ்க், கிரைம் பேட்ரோல் போன்ற தொடர்களில் பிரெக்‌ஷா மேத்தா நடித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் ரத்தானதால் மும்பையிலிருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூருக்குச் சென்றார் பிரெக்‌ஷா.

கடந்த இரு மாதங்களாக வேலை எதுவும் இல்லாததால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரெக்‌ஷா, தன்னுடைய வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில் பிரெக்‌ஷா மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.

தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன்பு தன்னுடைய மனநிலையை இன்ஸ்டகிராமில் வெளிப்படுத்தியுள்ளார். அதில், உங்களுடைய கனவு மரணிப்பது தான் மோசமான விஷயமாகும் என்று தன்னுடைய வேதனையைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வேலையில்லாத காரணத்தால் இரு தொலைக்காட்சி நட்சத்திரங்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது பாலிவுட்டிலும் சின்னத்திரை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரெக்‌ஷாவின் தற்கொலை குறித்து அவருடைய தந்தை ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்தானதால் பிரெக்‌ஷா நிம்மதியில்லாமல் இருந்தார். மும்பையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் வருத்தமடைந்தார். ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை அவர் எப்போதும் விரும்பவில்லை. ஊரடங்கு பற்றி செய்தித்தாள்களில் அவர் படிக்கும்போது, இந்த நிலைமை எல்லோருக்கும் தான், எனவே வருத்தப்படக்கூடாது என அறிவுரை கூறுவேன். இதுபோன்ற ஒரு முடிவை என் மகள் எடுப்பார் என யாரும் நினைக்கவேயில்லை.

திரைத்துறையிலும் சின்னத்திரை உலகத்திலும் நல்ல பெயர் எடுத்தபிறகு 2, 3 வருடங்கள் கழித்துதான் திருமணம் செய்வேன் என்று எங்களிடம் கூறியிருந்தார். திருமணம் செய்யச் சொல்லி அவரை நாங்களும் வற்புறுத்தவில்லை. அவருடைய தற்கொலைக் கடிதத்தைக் கண்டு இதையெல்லாம் ஏன் எழுதினார் எனக் குழப்பமடைந்தோம் என்று கூறியுள்ளார்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com