அது பிளாஸ்டிக் பாம்பு: ஈஸ்வரன் பட சர்ச்சை பற்றி இயக்குநர் விளக்கம்

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தைத் தெளிவுபடுத்தினோம்.
அது பிளாஸ்டிக் பாம்பு: ஈஸ்வரன் பட சர்ச்சை பற்றி இயக்குநர் விளக்கம்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் - ஈஸ்வரன். சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார். மேலும் தீபாவளி தினத்தன்று படத்தின் டீசர் வெளியாகும் என்றும் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். 

ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டர் விடியோ சமீபத்தில் வெளியானது. இதில் சிம்பு கழுத்தில் பாம்பு இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.

மேலும் படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு பாம்பைப் பிடிக்கும் காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த பாம்பை சிம்பு தனது கையால் பிடித்து சாக்குப்பையில் போடும் விடியோ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த விடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிம்பு பாம்பைத் துன்புறுத்தியதாகவும் வன பாதுகாப்பு சட்டத்தை மீறியுள்ளதாகவும் புகார் எழுந்தது. படப்பிடிப்பில் வன உயிரினங்களைப் பயன்படுத்துவதற்கு விலங்கு நல வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்கிற விதிகளை மீறியுள்ளார்கள். பாம்பின் வாய் தைத்து துன்புறுத்தப்பட்டுள்ளது. எனவே சிம்பு உள்ளிட்ட ஈஸ்வரன் படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிண்டி வனத்துறை அலுவலகத்தில் வன ஆர்வலர் ஒருவர் புகார் அளித்தார். தனது புகார் மனுவை மத்திய விலங்கு நல வாரியத்துக்கும் அனுப்பினார். இதையடுத்து சிம்பு மற்றும் படக்குழுவினரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இயக்குநர் சுசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

சிம்பு பாம்பு பிடிக்கும் காட்சியில் போலியான பிளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை வைத்துப் படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போல கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காட்சி பற்றிய செய்தியையும் புகைப்படத்தையும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. கிராபிக்ஸ் செய்தபோது இந்த விடியோ சில நபர்களால் கசிந்துள்ளது. அதைப் பற்றி விசாரித்து வருகிறோம். 

இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தார். நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தைத் தெளிவுபடுத்தினோம். அதற்கு உண்டான ஆதாரங்களையும் விரைவில் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com