சூரரைப் போற்று படத்தில் சாதிப் பிரச்னையைத் தூண்டும் பாடல்: புகாரைப் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சாதிப் பிரச்னையைத் தூண்டும் வகையில் உள்ளதால் 2022 வரை இப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று...
சூரரைப் போற்று படத்தில் சாதிப் பிரச்னையைத் தூண்டும் பாடல்: புகாரைப் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சூரரைப் போற்று படத்தில் சாதிப் பிரச்னையைத் தூண்டும் வகையில் பாடல் உள்ளதாகக் கொடுக்கப்படும் புகாரைக் காவல்துறை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தருமபுரி மாவட்டம் அஞ்சேஹல்லி கிராமத்தை சேர்ந்த ஏ.கார்த்திக் தாக்கல் செய்த மனுவில், நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மண் உருண்ட மேல' எனும் பாடலில், சாதிப் பிரச்னையை தூண்டும் விதமான வரிகள் வருகின்றன. தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அமைதியாக வாழ்ந்து வரும் நிலையில் இதுபோன்ற பாடல் வரிகள் மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்னையை பெரிதாக்கக் கூடும். எனவே வரும் 2022-ஆம் ஆண்டு வரை சூரரைப் போற்று படத்தை வெளியிடத் தடை விதிக்கவேண்டும். இதுதொடர்பாகக் கடந்த மார்ச் 20-ஆம் தேதி தருமபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருக்குத் தபால் மூலம் புகார் அனுப்பினேன். அந்தப் புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெய்சிங், புகார் அளித்து 5 மாதங்களான பின்னரும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிட்டார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் எஸ்.கார்த்திகேயன், தருமபுரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு இதுவரை புகார் வந்து சேரவில்லை எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் மீண்டும் புகார் மனுவை கொடுக்க வேண்டும், அந்தப் புகாரைச் சட்டப்படி பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com