பெரியார் விவகாரம்: மன்னிப்பு கோரினார் இயக்குநர் செல்வராகவன்

கெட்ட குணங்களை கொண்ட கதாபாத்திரத்துக்கு ராமசாமி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பெரியார் விவகாரம்: மன்னிப்பு கோரினார் இயக்குநர் செல்வராகவன்

நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திரத்துக்கு ராமசாமி என்கிற பெயர் வைத்தது தொடர்பான சர்ச்சையில் மன்னிப்பு கோரியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் - நெஞ்சம் மறப்பதில்லை. நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ள படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ளது. 2017-ம் ஆண்டு வெளியாக வேண்டிய இந்தப் படம் பல தடங்கல்களால் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் இப்படம் வெளியானது. 

இந்தப் படத்தில் கெட்ட குணங்களை கொண்ட கதாபாத்திரத்துக்கு ராமசாமி எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராம்சே என்கிற ராமசாமி கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன், செல்வராகவனைப் பேட்டியெடுத்தபோது இந்தக் கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

பரத்வாஜ் ரங்கன்: ஆயிரத்தில் ஒருவன் படம் வெளிவந்தபோது பலரும் ஈழம் குறித்த மறைமுகப் பதிவாக அதைப் பார்த்தார்கள். (நெஞ்சம் மறப்பதில்லை படம்) இதுவும் மறைமுகப் பதிவா? ராமசாமி என்கிற பெயரை கொண்டவருக்கு எதிராகக் கடவுளை எதிர்கொள்ள வைத்துள்ளீர்கள். 

(மெளனமாக, லேசாகத் தலையாட்டுகிறார் செல்வராகவன்.)

பரத்வாஜ் ரங்கன்: பதில் சொல்ல வேண்டாம். தலையசைத்தால் போதும்.

செல்வராகவன்: ஆமாம்.

*

இந்தப் பேட்டி வெளியான பிறகு பெரியாருக்கு எதிராக செல்வராகவன் செயல்பட்டுள்ளதாக ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதையடுத்து தன்னுடைய பேட்டிக்கு செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நண்பர்களே, அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும் என்று கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com