நடிகர் ராகவா லாரன்ஸின் நடிப்பில் உருவாக உள்ள 'துர்கா' பட முதல் பார்வை போஸ்டர் சமூக வலைதளங்களில் விமரிசனத்துக்குள்ளாகியுள்ளது.
நடிகர் ராகவா லாரண்ஸ் இயக்கத்தில் நகைச்சுவை கலந்த திகில் படங்களாக உருவான காஞ்சனாவின் 3 பாகங்களும் குடும்ப ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. மேலும் தனது காஞ்சனா படத்தை அக்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் லக்ஷ்மி என்ற பெயரில் மறு உருவாக்கம் செய்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் 'ருத்ரன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் 'துர்கா' என்ற முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்.
நீண்ட வெள்ளைத் தாடி, குங்குமம் என அகோரி தோற்றத்தில் இருக்கிறார். இன்னொரு போஸ்டரில் நீண்ட முடியுடன் சாதாரண தோற்றத்தில் இருக்கிறார். இந்தப் படத்திலும் 'காஞ்சனா' படத்தைப் போலவே இரட்டை வேடங்களில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அவரது பட நிறுவனமான ராகவேந்திரா புரொடக்சன் சார்பாக தயாரிக்கிறார். ஆனால் தான் இந்தப் படத்தை இயக்கவில்லை எனவும், இயக்குநர் விரைவில் அறிவிக்கப்படுவார் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதல் பார்வை போஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஒரு சிலர் இந்த போஸ்டர் மிரட்டலாக இருப்பதாக கூற ,சிலர் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது படங்களின் மூலம் தொடர்ந்து பிற்போக்குத் தனமான கருத்துக்களை முன் வைப்பதாக விமரிசித்து வருகின்றனர்.
மேலும் சிலர் இந்த போஸ்டர் நகைப்புக்குரிய வகையில் இருப்பதாக கருத்து கூறி வருகின்றனர். இந்த வகைப் படங்கள் குழந்தைகளை மிகக் கவரும் வகையில் இருப்பதால், துர்கா படத்துக்கும் குடும்ப ரசிகர்களின் ஆதரவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துர்கா பட முதல் பார்வை போஸ்டர் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
Thanks all for the extraordinary response for #Durga first look, With the blessings of Ragavendra Swami here is the second look