நடிகர் சார்லி அளித்த புகார்: அரை மணி நேரத்தில் போலி சுட்டுரைக் கணக்கை முடக்கிய காவல்துறை

எனது பெயரில் போலி சுட்டுரை கணக்கு தொடங்கப்பட்டது குறித்து புகார் அளித்த...
நடிகர் சார்லி அளித்த புகார்: அரை மணி நேரத்தில் போலி சுட்டுரைக் கணக்கை முடக்கிய காவல்துறை

சென்னை, ஜூன் 11: தனது பெயரில் சுட்டுரையில் தொடங்கப்பட்ட போலி கணக்கு தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நடிகர் சார்லி சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். 

தமிழ் திரைப்படத்துறையில் நகைச்சுவை நடிகராக இருக்கும் சார்லி, சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார். அங்கு அவர், ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார். 

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ் திரைப்படத்துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக உள்ளேன். எனது பெயரில் எந்த சமூக ஊடகத்திலும் கணக்குத் தொடங்கவில்லை. இந்நிலையில் என்னுடைய பெயரில் போலியாக சில மர்ம நபர்கள் சுட்டுரையில் கணக்குத் தொடங்கியுள்ளனர். எனவே காவல்துறையினர், எனது பெயரில் போலியாக தொடங்கியுள்ள அந்த கணக்கை முடக்கி, சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவைப் பெற்ற சங்கர் ஜிவால், உடனடியாக சார்லி பெயரில் உள்ள போலி சுட்டுரை கணக்கை முடக்கும்படி சைபர் குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் விளைவாக சைபர் குற்றப்பிரிவினர், அரை மணி நேரத்தில் அந்தக் கணக்கை முடக்கினர். 

இதையடுத்து சார்லி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

எனது பெயரில் போலி சுட்டுரை கணக்கு தொடங்கப்பட்டது குறித்து புகார் அளித்த 30 நிமிடங்களுக்குள், அது முடக்கப்பட்டுள்ளது. துரிதமாக செயல்பட்ட சென்னை காவல்துறைக்கும், காவல் ஆணையருக்கும் எனது பாராட்டுக்கள்.

அந்த போலி கணக்கை தொடங்கிய நபர் குறித்து சைபர் குற்றப்பிரிவினர் விசாரணை செய்கின்றனர். ஒருவர் பெயரில் சமூக ஊடகங்களில் போலியான கணக்கு உருவாக்கி, அதன் மூலம் லாபம் பெற நினைப்பது வேதனை அளிக்கிறது. எனது ரசிகர்கள் அந்த போலி கணக்கை பின் தொடர்வதை தவிர்க்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com